Contact Us

Name

Email *

Message *

Tuesday 21 May 2013

ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள்

ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம், நெரூர்

ஞானத்தை பெற வேண்டும் என்றால் முதலில் நாம் யார் என்பதை உணர்ந்தாலே ஞானத்தை பெறலாம். சுவாமி விவேகானந்தரும், புத்தரும் தனக்கு தானே கேட்டுக்கொண்ட முதல் கேள்வி “நாம் யார்?” என்பதே. இதற்கு விடை தெரிந்துவிட்டால் மனிதர்களுக்குள் போட்டி இருக்காது – பொறாமை இருக்காது. மனிதன், மனிதனாக வாழ தகுதியடைந்துவிடுகிறான்.

இப்படி தகுதி வாய்ந்தவர்கள்தான் மகான்கள், சித்தர்கள். அதில் ஒருவர்தான் சிவராம கிருஷ்ணன். யார் இந்த சிவராம கிருஷ்ணன்? இவருக்கும் புன்னை நல்லூர் மாரியம்மன் வரலாறுக்கும் என்ன சம்மந்தம்?

சிவராம கிருஷ்ணனின் தந்தை பெயர் சோமநாத யோகி. தாயார் பெயர் பார்வதி. தந்தை இல்லறத்தைத் துறந்து இமயம் சென்றுவிட்டார். தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார் சிவராம கிருஷ்ணன். காலங்கள் ஓடியது. இறைவனின் ஆசியால் பல வித்தைகளை கற்றார். ஞானியாக திகழ்ந்தார்.

சிவராமகிருஷ்ணன் சிறுவயதிலேயே இறை பக்தி அதிகம் கொண்டதால் இல்லரவாழ்க்கையே தனக்கு வேண்டாம் என்ற எண்ணம் மனதில் உருவானது. அவருடைய தாய் எவ்வளவோ சொல்லியும் திருமணத்தில் விருப்பம் இல்லாமல், தவத்திலேயே பல ஆண்டுகளை கழித்து “சித்தர்” என்கிற அற்புத நிலை அடைந்தார்.

அதிர்ந்த முகமதிய மன்னர்


ஒருநாள் அம்பாளை நினைத்து மெய் மறந்து தவத்தில் இருந்தவர், தன்னை மறந்து தெருவில் நடக்கும்போது, இஸ்லாமிய பெண்கள் இருக்கும் பகுதிக்கு வந்துவிட்டார். அது ஆண்கள் நுழைய அனுமதி இல்லாத பகுதி. இதை கண்ட அந்த பெண்கள் அதிர்ச்சியில் கூச்சலிட, அந்த சமயம் நகர்வலம் வந்துக்கொண்டிருந்த முகமதிய மன்னருக்கு இந்த தகவல் தெரிவிக்கபடுகிறது. ”ஆண்கள் நடமாட அனுமதி இல்லாத பகுதிக்குள் வந்திருக்கிறான். அதனால் இவனுடைய கைகளை வெட்டி எரியுங்கள்.” என்றார் முகமதிய மன்னர்.

காவலர்களும் மன்னரின் கட்டளைக்கு பணிந்து, நடந்துவந்துக்கொண்டிருந்த சித்தரை பிடித்தார்கள். உடனே சித்தரின் கையை வெட்டி வீசினார்கள். தன் கை வெட்டப்பட்டதை பற்றியும் தெரியாமல், எந்த சலனமும் இல்லாமல், கால்போன போக்கில் நடந்து போய்க்கொண்டிருந்தார் சித்தர்.

இந்த அதிசயத்தை நேரடியாக கண்ட முகமதிய மன்னர், இவர் சாதாரண மனிதராக இருக்க முடியாது என்பதை உணர்ந்து சித்தரை நெருங்கி, “நீங்கள் யார்.?” என்று கேட்டார்.

கை வெட்டப்பட்டபோதே எந்த உணர்வும் காட்டாதவர், மன்னரின் கேள்விக்கா பதில் சொல்ல போகிறார்.? சித்தரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

காரணம், சித்தரை பொறுத்தவரை அந்த சமயம் அவர் அம்பாளுடன் தன் மனதுக்குள் பேசிக்கொண்டிருந்தார். மன்னரும் விடவில்லை. சித்தரை பற்றிய விவரத்தை எப்படியாவது தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், பல மணி நேரம் சித்தரை பின் தொடர்ந்து பேசிக்கொண்டே நடந்தார் மன்னர். சில மணி நேரத்துக்கு பிறகே சித்தர் தன் சுயநினைவுக்கு வந்தார்.

“யார் நீ?” என்றார் அரசரை பார்த்து சித்தர்.

“இஸ்லாமிய பெண்கள் இருக்கும் பகுதியில் நீங்கள் வந்ததால் உங்கள் கையை வெட்டி விட்டேன்.” என்றார் மன்னர்.

அப்போதுதான் தன் கைகள் வெட்டப்பட்டதை பார்த்தார் சித்தர்.

“ஓ… அப்படியா. சரி இருக்கட்டும். நீ ஏன் என்னை பின் தொடர்ந்து வருகிறாய்.?” என்று எந்த சலனமும் இல்லாமல் கேட்டார் சித்தர்.

“விசாரனை செய்யாமல் உங்களுக்கு தண்டனை வழங்கிவிட்டேனோ என கவலையாக இருக்கிறது. நீங்கள் இறைவன் மீது அதிகம் பற்றுக்கொண்ட மாமனிதர் என்பதை தெரிந்துக்கொண்டேன். என்னால் உங்கள் கை துண்டிக்கபட்டுவிட்டதே என்று நினைக்கும்போது என் மனம் மேலும் கவலை அடைகிறது.” என்றார் மன்னர்.

“இதற்கு ஏன் கவலைப்படுகிறாய்?. உன்னால் வெட்டபட்ட கைகள், உன்னாலே இணையட்டும். நீ என் கைகளை கொண்டு வந்து ஒட்டி விடு. எனக்கு என் கைகள் கிடைக்கும், உனக்கு உன் கவலை தீரும் போதுமா?” என்றார் புன்னகையுடன் சித்தர்.

முகமதிய மன்னரும் அவசர அவசரமாக துண்டிக்கபட்ட சித்தரின் கைகளை கொண்டு வர சொல்லி உத்தரவிட்டார். வெட்டப்பட்ட அந்த கைகளை கொண்டு வந்து, துண்டிக்கபட்ட பகுதியின் அருகே மன்னர் கொண்டு சென்றபோது, இரும்பை ஈர்க்கும் காந்தம்போல சித்தரின் உடல், அந்த கைகளை ஈர்த்து தானாக ஒட்டிக்கொண்டது. முகமதியமன்னரும் மற்றவர்களும் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் சித்தர், எந்த பெரிய அதிசயமும் நடந்துவிடவில்லை என்பதுபோல, தன் கால்போன போக்கில் பல ஊர்களுக்கு சென்றார். மக்களால் “சதாசிவ பிரம்மேந்திராள்” என்று அழைக்கப்பட்டார்.

பல ஊர்களுக்கு சென்று அங்கு வசிக்கும் மக்களின் பிணிகளை தீர்த்தார் சித்தர். பக்தர்கள் அவருக்கு “சதாசிவ பிரம்மேந்திராள்” என்ற புது பெயர் சூட்டி சித்தரை போற்றினார்கள்.

புன்னை நல்லூர் மாரியம்மன், தஞ்சை மாவட்டம்

ஒருநாள் புன்னை மரம் அதிகம் இருக்கும் புன்னை நல்லூருக்கு வருகை தந்தார் சித்தர். அந்த அடர்ந்த காடு அவர் மனதுக்கு மகிழ்சியை தந்தது. அதனால் அந்த இடத்திலேயே தங்கிவிட்டார். அந்த இடத்தில் பாம்புகளும், அவற்றின் புற்றுகளும் அதிகம் இருந்தது. ஒருநாள், அந்த புற்று மண்ணில் அம்மன் சிலை ஒன்றை செய்தார். அந்த சிலைக்கு “புன்னைநல்லூர் மாரியம்மன்” என்ற நாமம் சூட்டி வழிபட்டு வந்தார்.

ஒரு சமயம், தஞ்சை அரசரின் மகள், கண் நோய் பாதித்து பார்வை இழந்தாள். பல செல்வங்கள் இருந்தும், அதிகாரங்கள் ஆயிரம் இருந்தும் தம் செல்ல மகள் இந்த உலகை பார்க்கும் பாக்கியம் இல்லாதவள் ஆனாளே” என்று வருந்தினார் அரசர்.

பணக்காரனையும் பரதேசியை போல புலம்ப வைப்பது வியாதிகள்தான். அதுபோல, அரசரும்-அரசியும் தன் மகளின் நிலையை பற்றி யார் விருந்தினராக வந்தாலும் அவர்களிடம் கவலையில் வருந்தி பேசுவார்கள்.

அவர்களின் வருத்தம் இறைவனுக்கு எட்டியதோ என்னவோ, ஒரு பெரியவர் மன்னரை சந்தித்தார். “நீங்கள் புன்னைவனத்துக்கு செல்லுங்கள். அங்கே “சதாசிவ பிரம்மேந்திராள்” என்கிற ஒரு சித்தர் வசிக்கிறார். அவர் புற்றுமண்ணால் அம்மனுக்கு சிலை செய்து தினமும் வணங்கி வருகிறார். அவரின் பார்வை (நேத்திர தீட்சை) நம் மீதுபட்டாலே தீராத நோயும் தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் அவரை சந்தித்தால் நிச்சயம் உங்கள் மகளுக்கு கண் பார்வை கிடைக்கும்.” என்றார் அந்த பெரியவர்.

அரசரும் தன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு புன்னைநல்லூரில் இருக்கும் சித்தரை தரிசித்தார்கள்.

“உன் மகளின் கண் நோய் தீர இந்த அம்மனுக்கு ஒரு ஆலயம் எழுப்பு. நீ கட்டி எழுப்பும் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இந்த அம்பாளை பலர் கண்குளிர தரிசிக்க தரிசிக்க, உன் மகளுக்கும் அம்பாளை கண் குளிர தரிசிக்கும் பாக்கியம் கிட்டும். இதுதான் உன் மகளுக்கு மருந்து.” என்றார் சதாசிவ பிரம்மேந்திராள் என்கிற அந்த சித்தர் பெருமான்.

சித்தர் சொன்னபடி அம்மனுக்கு ஆலயம் எழுப்பும் திருப்பணி தொடங்கியது. சில நாட்களில் திருக்கோயிலை கட்டி முடித்தார் அரசர். அரசர் அம்மனுக்கு சிறிய அளவில்தான் கோயிலை கட்டினார். காரணம் சிறிய அளவில் கோயில் கட்டினால்தான் கட்டட பணி விரைவில் நிறைவடையும், தன் மகளுக்கும் விரைவில் பார்வை கிடைக்க வழி பிறக்கும் என்று அரசர் விரும்பினார்.

தன் கைபட புற்றுமண்ணால் செய்த அம்மன் சிலையை சதாசிவ பிரம்மேந்திராள் பிரதிஷ்டை செய்தார். மக்கள் அம்மனை தரிசித்து மகிழ்ந்தார்கள். மறுநாள், அரசரின் மகளுக்கு கண் பார்வை கிடைத்தது. அரசரின் மகளும் புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலுக்கு விரைந்தோடி வந்து, கண் குளிர ஆனந்த கண்ணீருடன் தரிசித்தாள்.

பரிகாரம்


அன்னை புன்னைநல்லூர்மரியம்மன், உஷ்ணமானவள். அதனால் வருடத்திற்கு ஒருநாள் அம்மனின் முகத்தில் வியர்வை முத்து முத்தாக வடியும். அதனால் முத்துமாரியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். முத்துமாரியம்மன் என்கிற புன்னைநல்லூர் மாரியம்மனின் உஷ்ணத்தை தணித்தாலே தங்களின் நோய் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை.

அதனால் அம்மன் சந்நிதிக்கு அருகில் உள்ள தொட்டிக்கு, “உள்தொட்டி” என்றும், பிரகாரத்தை சுற்றி உள்ள தொட்டிக்கு, “வெளித்தொட்டி” என்றும் சொல்லப்படும் இந்த இரு தொட்டிகளிலும் தண்ணீர் நிரப்பினால், எந்த நோயாக இருந்தாலும் நீங்கி விடுகிறது என்பது பக்தர்களின் அனுபவ உண்மை.

அம்மனுக்கு ஜவ்வாது – புணுகு கொடுத்தால் வாழ்வில் வசந்தம் வீசும், கண்பார்வை பாதிப்பு உள்ளவர்கள் மாவிளக்கை தங்களின் கண்களில் வைத்து நேர்த்திகடன் செய்தால் பார்வை கோளாறு நீங்கும். உடலில் கட்டிகள் இருந்தால் வெல்லத்தை கோயிலில் அமைந்துள்ள தீர்த்தத்தில் போட்டால் வெல்லம் கரைவது போல கட்டிகளும் கரைந்து விடும்.

சதாசிவ பிரம்மேந்திராள் என்கிற மகாசித்தரால் உருவாக்கபட்ட புன்னைநல்லூர் மாரியம்மனை தரிசித்தாலே அனைத்து கர்மாக்களும், கவலைகளும் தீரும். நினைத்தை நினைத்தது போல நிறைவேற்றி தருவாள் அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன்.

கூகுள் வரைபடம்: ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம்

ஸ்ரீ டி.எம்.கிருஷ்ணா & ஸ்ரீமதி சங்கீதா சிவகுமார் பாடியுள்ள ஸ்ரீ ஸதாசிவேந்திர பஞ்சரத்ன ஸ்தோத்ரம்.

No comments:

Post a Comment