Contact Us

Name

Email *

Message *

Sunday 10 November 2013

நித்திய கர்மானுஷ்டானங்கள் எனும் ஏணி

மஹாபெரியவாள் ஆந்திரப் பிரதேசத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த சமயம்.

புகழ் பெற்ற தத்துவமேதையும், பெரியவாளிடம் எல்லையற்ற பக்தி கொண்டிருந்தவருமான டாக்டர் டி.எம்.பி.மஹாதேவன் அவர்கள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவருடன் தரிசனத்துக்கு வந்திருந்தார். அந்தப் பாதிரியார், ஜப்பான் நாட்டில் தங்கி ஜென் புத்திஸம் (புத்தமதத்தில் ஜென் என்ற ஒரு பிரிவு) பற்றி நன்றாகக் கற்றறிந்தவர். சென்னைப் பல்கழைக்கழகத்தில், ’ஜென் புத்தமதமும் அத்வைதமும்’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

அந்த ஜெர்மானியர் வயது முதிர்ந்தவர்; கிறிஸ்தவப் பிரசாரத்துக்காக ஜப்பானிலேயே வாழ்நாளைக் கழித்தவர்.

பெரியவாளுடன் அவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும்போதே, இஸ்ரேல் நாட்டு அமைச்சர் ஒருவரும், அவருடைய செயலாளரான ஒரு பெண்மணியும் தரிசனத்துக்கு வந்து, பேச்சில் கலந்து கொண்டார்கள்.

பெரியவாள், அந்தப் பாதிரியாரிடம், அவர் நிகழ்த்திய சொற்பொழிவின் சாராம்சத்தைப் பற்றி வினவினார்கள். டாக்டர் மஹாதேவன் மொழிபெயர்த்து சொல்லிக் கொண்டிருந்தார்.

“பைபிளில், I and my father are one என்று கிறிஸ்து சொல்கிறாரே, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறார்கள்?” என்று பெரியவாள் கேட்டார்கள்.

பாதிரியார், பல சமய தத்துவங்களையும் பற்றித் தெரிந்தவர் என்பதால், பெரியவாளுடைய கேள்வியின் உட்கருத்தை உடனே புரிந்து கொண்டார்.

”இது அத்வைதத்துக்குச் சமமானதுதான். நீங்கள் சொல்வது சரி. ஆனால், கிறிஸ்தவ மதம் இந்த வாக்கியத்தைத் தாங்கள் கூறிய கருத்தில் ஒத்துக் கொள்ளவில்லை. கிறிஸ்தவர்கள் அத்வைத தத்துவத்தை வேறுவிதமாகச் சொன்னாலும்கூட நேரிடையாக ஏற்றுக் கொள்வதில்லை.”

அப்போது இஸ்ரேல் அமைச்சர் ஒரு கேள்வி கேட்டார்: “Self-centred என்றால் என்ன?”

“இதற்கு இரண்டு விதமாக அர்த்தம் கூறலாம்” என்றார் டாக்டர் மஹாதேவன். “ஒன்று : Selfish (சுயநலம்) மற்றொன்று: Centered in the Self (ஆன்மாவில் லயித்திருப்பது). இவற்றில் தாங்கள் எதைப்பற்றிக் கேட்கிறீர்கள்?”

“இரண்டாவதாகச் சொன்னீர்களே, அதைப்பற்றித் தான் கேட்கிறேன்”.

சில நிமிஷ இடைவெளி. பெரியவாள் சொன்னார்கள் : “நாம், நமக்குள்ளே இருக்கும் பேரொளியில் நம்மை உட்படுத்திக் கொள்ளுதல்.”

செயலாளப் பெண்மணி மெல்லக் கேட்டார்: “இது First-sinக்குச் சமம் அல்லவா?”

பாதிரியார் சூழ்நிலை தனக்கு எதிராகச் சென்று கொண்டிருப்பதை உணர்ந்ததும், மனத்திற்குள் கொஞ்சம் வெம்மை அடைந்தார்.

“இந்தப் பெண்மணிக்கு நிறையக் குழப்பம். இவரும் Jesuit தான். ஆனால், இவர் மிகவும் ஆரம்ப நிலையில் இருக்கிறார். இன்னும் ரொம்ப உயரத்துக்குப் போக வேணும். மேலே போய்விட்டால், இதைப்பற்றிய சர்ச்சையெல்லாம் வராது. ஆனால், மேலே செல்வதற்கு நிறையப் பயிற்சி செய்ய வேண்டும். மேல்நிலையை அடைந்தவுடன் அப்யாசம் என்ற ஏணியை உதைத்துக் கீழே தள்ளி விடலாம்.”

பெரியவாள் : அந்த ஏணியை உதைத்துத் தள்ள வேண்டாமே? அது, அப்படியே இருக்கலாம்; மேலே வர முயற்சிக்கும் வேறு ஒருவருக்குப் பயன்படும், இல்லையா? (ஆன்மிக முன்னேற்றத்துக்கு, சனாதன தர்மத்தில் விதித்துள்ள நித்திய கர்மாக்கள், சமயானுஷ்டானங்கள் தான் ஏணி, அதை உதைத்துத் தள்ளி விடக்கூடாது என்றால் நித்திய கர்மாக்கள் அவசியம் செய்யப்பட வேண்டும் என்பது பெரியவாளின் அடிமனத்தில் இருந்த உள்நோக்கம்.)

சாதனைகளின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறியதைக் கேட்டதும், வெளிநாட்டுக்காரர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

பெரியவாளின் தெளிவான, அவரவர் பழக்கவழக்கத்தை அங்கீகரிக்கும் விசால மனத்தை, தொலை நோக்குப் பார்வையை உணர்ந்து மனமுருகிப் போனார்கள்.

வந்திருந்தவர்கள் வெவ்வேறான தத்துவக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்கள். ஆனால், பெரியவாள் அவர்கள் எல்லோரையும் தம் கைப்பிடிக்குள் கொண்டு வந்து விட்டார்கள்!

அத்வைதம், ஆழங்காண முடியாத, எல்லைகாணமுடியாத, எவ்வளவு சுவைத்தாலும் திகட்டாத அமுதசாகரம். மஹாபெரியவாள் அந்தப் பெருங்கடலிலேயே எப்போதும் திளைத்துக் கொண்டிருப்பவர்கள் என்பதை அன்றைய உரையாடலைக் கேட்டவர்கள் எண்ணி எண்ணி மகிழ்ந்தார்கள்.வாதங்கள் ஒருவாறு சமாதானமாக முடிந்தன.பாதிரியார், பெரியவாளிடம் ஆசி வேண்டி நின்றார்.

“நீங்கள் உங்கள் வழியிலேயே போகலாம். அது உங்களை மேலே கொண்டு செல்லும்” என்று கூறினார்கள் பெரியவாள்.

செயலாளரான பெண்மணிக்குக் கண்களில் நீர் தளும்பியது. “தெய்வ சன்னிதானத்தை விட்டுப் போக வேண்டியிருக்கிறதே!” தன்னால் முடிந்தபடி வந்தனம் செய்தார். அவளுக்குப் பிரத்யேக ஆசீர்வாதமாக, கல்கண்டுப் பிரசாதம் அளித்தார்கள் பெரியவாள். இஸ்ரேல் அமைச்சருக்குப் பழங்கள் கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.



Courtesy: Shri Varagooran Narayanan

No comments:

Post a Comment