Contact Us

Name

Email *

Message *

Monday 4 November 2013

சோழர் கல்வெட்டில் ஆதிசங்கரர்

திருச்சிக்கருகில் திருவெறும்பூருக்கு அண்மையில் சோழமாதேவி என்னும் ஊரில் கைலாயமுடையார் கோயிலில் பொறித்துள்ள ஒரு கல்வெட்டு தமிழ்நாடு தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி அண்மையில் கண்டுபிடித்தார். முதலாம் இராஜராஜனின் பெயரனும் இராஜேந்திர சோழனின் மகனுமான வீரராஜேந்திர சோழனின் கல்வெட்டு அது. அவனது மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது. கி.பி. 1065ஐச் சார்ந்தது. கல்வெட்டு தமிழில் உள்ளது. ஒரு சில சமஸ்கிருத சொற்கள் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன.

சோழமாதேவி ஊர்ச்சபையார் சங்கர பகவத்பாதர் அருளிய பாஷியத்துக்கு சிதாநந்தபட்டர் என்பவர் எழுதிய பிரதீபகம் என்னும் உரையை இவ்வூரில் விரித்து உரை நிகழ்த்துபவர்களுக்கு நிலம் தானமாகக் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு அளித்த சாஸனப்பத்திரம் அந்தக் கல்வெட்டு.

கல்வெட்டின் தொடக்கப் பகுதி பின்வருமாறு:

பாண்டியகுலாசனி வளநாட்டு பிரமதேயம் ஸ்ரீ சோழமாதேவி
சருப்பேதி மங்கலத்து பெருங்குறி சபையோம். திருமாதிரி
நல்சாலை ஆழ்வார் திருமுற்றத்து கூட்டம் குறைவறக்
கூடியிருந்து பணிப்பணியால் பணித்து பகவத்பாதீயம் சாரீரக
பாஷ்யத்துக்கு சிதாநந்த பிடாரர் பண்ணிந பிரதீபகம் ஆகிற
வார்த்திகம் வாக்கணிப்பார்க்கு விருத்தியாக விட்ட நிலம்......

என்று கூறுகிறது.

பகவத் பாதீயம்

வேதாந்தங்களான உபநிடதங்களின் தத்துவப் பொருளை ஆயும் சாஸ்திரத்துக்கு "சாரீரக மீமாம்ஸை" என்று பெயர். ஆதிசங்கர பகவத்பாதர் தாம் பிரும்ம சூத்ரத்துக்கு எழுதிய பாஷியத்தை "சாரீரக மீமாம்ஸை" என்றே கூறுகிறார். அதையே இக் கல்வெட்டு "பகவத் பாதீயம் சாரீரக பாஷ்யம்" என்று குறிக்கிறது.

ஆதி சங்கரரையும் அவரது பாஷ்யத்தையும் திட்ட வட்டமாக குறிக்கும் மிகவும் தொன்மையான ஆதார பூர்வமான கல்வெட்டு இதுவேயாகும். சோழ நாட்டல் கி.பி. 1065 க்கும் முன்பிருந்தே சங்கரரின் பாஷ்யம் பேணிப் படிக்கப்பட்டு வந்தது என்பதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது. அந்த பாஷ்யம் "பகவத்பாதீயம்" என்று சோழர் காலத்தில் அழைக்கப்பட்டது என்பதையும் இக்கல்வெட்டு வாயிலாக அறிகிறோம்.

சிதாநந்தர்

இக்கல்வெட்டு மேலும் ஒரு செய்தியைத் தருகிறது. சங்கரபாஷ்யத்துக்கு சிதாநந்தர் என்ற ஒரு பெரியவர் விரிவுரை ஒன்று எழுதியிருக்கிறார். அதற்கு "ப்ரதீபகம்" என்றும் "வார்த்திகம்" என்றும் பெயர். அதைக் கல்வெட்டு "சிதாநந்த பிடாரர் பண்ணிந பிரதீபகம் ஆகிற வார்த்திகம்" என்று கூறுகிறது. சங்கரபாஷ்யத்துக்கு இதுகாறும் வந்துள்ள உரைகளின் பட்டியலை, நூல்களிலிருந்தும் சுவடிகளிலிருந்தும் திரட்டி காஞ்சி பரமாசார்யாள் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். அப்பட்டியலில் கூட இப்பிரதீபகம் என்னும் உரை குறிக்கப்படவில்லை. ஆகையால் இந்நூல் தற்காலத்தில் கிடைக்கவில்லை என்றே கொள்ள வேண்டும். இதுகாறும் கிடைக்கபெறாத ஒர் உரையை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது என்பதும் இதன் ஒரு சிறப்பாகும்.
இந்நூல் இயற்றிய சிதாநந்தர் யார்? அவரது காலம் என்ன என்பதும் தெளிவாக இல்லை. எனினும் அவர் இக்கல்வெட்டுக்கு முன்னர் உரை எழுதி அது பிரபலமாக இருந்தது என்று இக்கல்வெட்டு வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம்.

காஞ்சி காமகோடி மட பாரம்பர்யத்தைக் குறிக்கும் நூல்களில் சித்சுகானந்தேந்திரர் என்று ஒரு பெரியவர் கி.பி. 8ம் நூற்றாண்டின் மத்தியில் காஞ்சி பீடத்தை அலங்கரித்ததாக ஒரு குறிப்பு உண்டு. அவருக்கு சிதாநந்தர் என்ற மறுபெயர் உண்டு என்றும், அவர் பாலாற்றங் கரையிலிருந்து ஓர் ஊரினர் என்றும், காஞ்சியில் சித்தியடைந்தவர் என்றும் குறிப்புகள் உள்ளன. கல்வெட்டில் குறிக்கப்பெறும் சிதாநந்தரும் காஞ்சி பீடாதிபதி சிதாநந்தரும் ஒருவரா வெவ்வேறானவர்களா என்று கூற இயலவில்லை.

சோழர் காலத்தில் சங்கரபாஷ்யம் சிறந்தது

முதலாம் இராஜராஜ சோழன், இராஜேந்திரன், வீரராஜேந்திரன் முதலிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகளிலிருந்து தமிழ்நாட்டில் கி.பி. 10 - 11ம் நூற்றாண்டுகளில் பல ஊர்களிலும் குறிப்பாக அரசர்கள் ஏற்படுத்திய புதிய ஊர்களில் வேதாந்த பாஷ்யங்பள் மிகவும் சிறப்பாக போதிக்கப்பட்டன என்று அறிய முடிகிறது. ஆனூர், எண்ணாயிரம், திருமுக்கூடல், திரிபுவனி ஆகிய ஊர்களில் அக் காலத்தில் கல்லூரிகள் இருந்ததையும் அங்கு வேதாந்தம் போதிக்கப்பட்டதையும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

சோழமாதேவி

சோழமாதேவி என்ற இவ்வூர் முதலாம் இராஜராஜ சோழனால் தோற்றுவிக்கப்பட்டது. அக்காலத்தில் ஊரின் மத்திய பகுதிக்கு "பிரும்மஸ்தானம்" என்று பெயர். இவ்வூரில் பிரும்மஸ்தானத்தில் ஒரு மண்டபம் இருந்தது. இதை "இராஜராஜன் அம்பலம்" என்றே ஒரு கல்வெட்டு கூறுகிறது. இதிலிருந்து இராஜராஜன் இவ்வூரைத் தோற்றிவித்த நாள் முதலே இங்கு வேதாந்தம் படிப்போர் இருந்திருக்கின்றனர் என அறியலாம்.

மேலும் பல அரிய செய்திகளை இந்திய நாட்டு வரலாறு அள்ளித்தரும் சோழமாதேவி கல்வெட்டு ஒரு வரலாற்றுக் கருவூலம் என்றே கூறலாம். இன்று பூஜையின்றி சிதிலமடைந்து கிடக்கும் இக்கோயிலைப் புதுப்பித்து மீண்டும் வழிபாடு நடத்த ஊர் மக்களும் தமிழக அரசும் ஆவன செய்யவேண்டும்.



நன்றி: http://www.tamilartsacademy.com/books/tavam/chapter07.xml

No comments:

Post a Comment