Contact Us

Name

Email *

Message *

Friday 27 December 2013

காஞ்சி சங்கராச்சாரியார் அருள்வாக்கில் உருவான ‘ஈச்சனாரி’ விநாயகர் கோவில்


பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா !


கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 9 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையில் உள்ளது இந்த அழகிய கோவில். விக்னங்களை அதாவது வினைகளை நமக்கு ஏற்படும் கவலைகளை களைபவர் விநாயகர். எந்த ஒரு நல்ல காரியம் தொடங்க, வீடு கட்ட, வியாபாரம் துவங்க, திருமணம் நன்கு நடைபெற, தேர்வுகளில் வெற்றி பெற, புது மனையில் நல்ல வாழ்வு நிலைத்திட, இப்படி அனைத்து காரியங்களிலும், விநாயகரைத் தொழுது துவங்கிட, எல்லை இல்லா ஆனந்தம் நல்கிடுவார் என்பது உறுதி.  இவர் வேத மந்திரங்களின் தலைவன் என போற்றப்படுவர். முழு முதற்கடவுள், பிரணவ மந்திரத்தின் உட்பொருளானவர்.

இந்த கோவில் இறைவன் எம்பெருமான் விநாயகர் 6 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்டவர். கோவை அருகிலுள்ள, மேலச்சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருத் தலத்திற்கு பிரதிஷ்டை செய்ய உருவாக்கி, மதுரையிலிருந்து மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர்.

இந்த இடம் வந்தவுடன் வண்டியின் அச்சு முறிந்து சரிந்துவிட்டது. இந்த இடத்திலேயே விநாயகர் அமர்ந்து விட்டார். எவ்வளவு முயற்சி செய்தும் அகற்ற முடியவில்லை. பின்பு காஞ்சி சங்கராச்சார்யார் சுவாமிகளை அணுகியபொழுது, அவரை இங்கேயே பிரதிஷ்டை செய்யுங்கள், என்று அருள்வாக்கு கூற, ஈச்சனாரி விக்னேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கலானார்.

இத்திருத்தலம் உருவாகி 475 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 1990-ம் ஆண்டு கும்பா பிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொழில் மேதை பொள்ளாச்சி மஹா லிங்கமும், அவருக்கு துணையாக மற்றொரு தொழில் மேதை பி.கே. துரைசாமியும், காஞ்சி காம கோடி பீடம், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேற்பார்வையில் நடத்தினர்.

மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் அழகாக பிரதான சாலையில் இருப்பது மிகவும் கவர்ச்சியாக ஆன்மீக பக்தர்களுக்கு இன்பத்தை தருகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி, கோவில் வளாகம் கட்டப்பட்டு விருத்தி செய்யப்பட்ட பின்பு, கோவிலை இந்து அறநிலையத்துறை எடுத்து அரசின் பராமரிப்பின் கீழ் கொண்டு வரப் பட்டது.

1977-ம் ஆண்டு அரசு எடுத்துக் கொண்டபொழுது அப்போதைய வருமானம் ரூ. 67,736. திறமையான நிர்வாகத்தினாலும், பக்தர்களின் வருகையினாலும், ஆன்மீகத்தில் மக்களின் ஈடுபாடுகளின் காரணமாக, சென்ற வருடத்தின் வருமானம், சுமார் 1,75,00,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரையும் இடைவெளி இன்றி தொடர்ந்து இத்திருத்தலத்தில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும், கணபதி ஹோமம் கட்டளைதாரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக கட்டளை தாரர்கள் ரூ.15,000 கட்டணம் செலுத்தி, முன் கூட்டியே பதிவு செய்துள்ளனர். இன்றுள்ள நிலவரப் படி அடுத்த 300 நாட்களுக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கின்றனர்.

இந்த திருக்கோவிலில் 27 நட்சத் திரங்களுக்கும் மலர் அலங்காரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ் வேறு விதமாக அலங்கரிக்கப்பட்டு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலும், 27 வித மலர் அலங்கார அழகு செய்யப்பட்டு பூஜை நடத்துவது மிகவும் சிறப்பானதாகும். இந்த கோவிலுக்கு இது பிரசித்தமானதாகும்.

மேலும் தினமும் நடைபெறும் பூஜைக்கு வேண்டிய அனைத்து பொருட்களும், அதாவது, பால், பன்னீர், சந்தனம், குங்குமம், திருநீறு மற்றும் மின் கட்டணங்களும் கட்டளைதாரர்களே செலுத்தி வருவது சிறப்பான அம்சமாகும்.

இந்த திருத்தலம் வந்து விநாய கரிடம் மனம் உருகி, பிரார்த்தனை செய்ய, குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைத்து, நல்ல உத்தியோகம் கிடைத்து வாழ்வில் உயர்வு பெறுவது உறுதி.

தொழிலில் நல்ல முன்னேற்றம், விவசாயத்தில் அதிக மகசூல், நினைத்தபடி திருமண வாழ்க்கை கிடைப்பதும் நிச்சயம் என்கின்றனர், இதை அனுபவித்து உணர்ந்தவர்கள், பலனை அடைந்தவர்கள் தங்கள் நேர்த்தி கடனை, பால் அபிஷேகம் செய்து, பால் கொழுக் கட்டை படைத்தல், சிதறு தேங்காய் உடைத்தல், சதுர்த்தி விரதம் பூணுதல், அருகம்புல் மாலை சாத்துதல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவைகளால் நிறைவு செய்கின் றனர்.

முக்கிய விழாக்கள்

சதுர்த்தி ஆவணி மாதம் 2 நாள் திருவிழா, மாதத்தில் கிருத்திகை, பௌர்ணமி, அமாவாசை, சித்திரை திருவிழா 2 நாட்கள், தைப் பூசம், கார்த்திகை தீபம், பொங்கல், தீபாவளி, தமிழ்-ஆங்கில வருட பிறப்பு ஆகியவை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.தினமும் 500 முதல் 1000 வரை பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு தினமும் 150 பக்தர்களுக்கு அன்னதானம் நடை பெறுகிறது.

இங்கு ஏழை எளியவர்களுக்கு திருமணம் எந்தவித தொகையும் பெறாமல் நடத்தப்படுகிறது. மேலும் இந்த கோவில் மூலம் அன்பு இல்லம்” என்ற பெயரில், 25 மாணவர் களுக்கு தங்குவதற்கும், உடை, உணவு அளித்து, கல்வி செலவையும் செய்கிறது. இதை பொதுமக்களும், பக்தர்களும் புகழ்ந்து பாராட்டு கின்றனர்.

தங்கரதம் ஒன்று தயார் செய்து, தங்க தேர் நேர்ச்சையும் நடைபெறுகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்தலத்தில் தற்பொழுது, வசந்தகுமாரி, துணை ஆணையர் நிர்வாகத்தின் கீழ் நன்றாக பராமரிக்கப்பட்டு பாராட்டும் வகையில் உள்ளது.



நன்றி: http://makkalkural.net

No comments:

Post a Comment