Contact Us

Name

Email *

Message *

Tuesday 14 January 2014

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம்


முலைப்பால் அருந்தும் பருவத்திலேயே முக்திஞானம் வரப்பெற்ற தவப்புதல்வர் ராமலிங்க அடிகளார். சிதம்பரத்தில் தில்லை நடராஜர் சந்நதி எதிரே  கூப்பிய கரங்களும், ஒன்றிய மனதுமாய் ராமய்யப்பிள்ளை தம்பதி. தந்தையின் கை மடிப்பில் ராமலிங்கர் ஆரோகணித்து அவர் நெஞ்சிலே சாய்ந்திருந்தார். கற்பூர தீபம் நடராஜரின் தேஜஸை விகசித்துக் காட்டியது. அனைவரும் உள்ளம் உருக, மெய் நெகிழ  பக்தி பரவசத்தில் ஆழ்ந்திருந்தபோது அந்த மழலையின் சிரிப்பு தெய்வீக மணியோசையின் பிரதிபலிப்பாக அனைவரையும் கவர்ந்தது. நடராஜன்  நகைப்பூட்டினாரா? கற்பூர ஒளி கிச்சு கிச்சு மூட்டியதா? இந்த சம்பவத்திலிருந்தே ராமலிங்கனாரின் தெய்வீகத் தன்மை வெளிப்படத் தொடங்கியது.

தந்தையின் மறைவுக்குப் பிறகு மூத்த அண்ணன் சபாபதியின் ஆதரவில் வாழத் தொடங்கினார், ராமலிங்கனார். பள்ளிக்குச் செல்வதை வெறுத்தார்.  அதனாலேயே தமையனாரின் கோபத்துக்கும் ஆளானார். ஆனால் ஏட்டு சுரைக்காயைச் சுவைக்காத அவர், கேட்டுப் பெறும் அறிவையெல்லாம் கேளா மலேயே, படிக்காமலேயே பெற்றார். அவர் படிப்பதற்கென்று தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தாலும் அங்கும் இறையுணர்வுடனேயே வாழ்ந்து வந்தார்.  அறையிலே பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக விளக்கு, சாம்பிராணி, கற்பூரம் என்று பூஜை சாமான்களும் பழம், இனிப்பு என்று நிவேதனப் பொருட் களும் நிறைந்திருந்தன. சுவரில் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று. எதிரே இருக்கும் உருவத்தை பிரதிபலிப்பதுதான் கண்ணாடியின் இயல்பு.

ஆனால்  இவரிடமிருந்த கண்ணாடி அழகு முருகனின் ஆனந்த திருக்கோலத்தைதான் காட்டியது. அவரைப் பொறுத்தவரை அந்தக் கண்ணாடியே முருகனின்  படம். அதற்கே பூஜை, வழிபாடு, ஆராதனை! அந்த ஒன்பது வயதில் யாருக்கும் கிடைத்தறியாத பேறு. ஆறுமுகங்கள், கடம்ப மாலையணிந்த பன் னிரு தோள்கள், கையில் கூர்வேல், பெருமானைத் தாங்கும் பெருமையுடன் மயில், நெடிதுயர்ந்த சேவல் கொடி என்று தான் கண்ட ‘தரிசன’த்தை விவரிக்கிறார், அவர். தான் இயற்றும் பாடல்கள், தான் சொல்லும் கருத்துகள் எதுவும் புத்தக வடிவில் வெளியாவதை வள்ளலார் விரும்பியதில்லை. அது ‘தற்புகழ்ச்சி’  என்பார் அவர். சென்னை ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூர் கோயிலுக்கு எப்படி தினமும் நடந்து போய் தரிசனம் செய்து வந்தாரோ, அதேப்  போல ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள கந்தகோட்டத்துக்கும் போய்வந்தார்.

இங்கே முருகன் சந்நதிக்கு எதிரே அமர்ந்து அவர் பாடிய பாடல்களை  அதே கோயிலில் பணியாற்றிய ஒருவர் குறித்து வைத்துகொண்டு பின்னாளில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். நூலின் பெயர், ‘சென்னை கந்தர் தெய்வ  மணிமாலை’. அதேபோல தொழுவூர் வேலாயுத முதலியார், இருக்கம் ரத்தின முதலியார் இருவரும் வள்ளலாரின் பிற பாடல்களைப் புத்தகமாகக்  கொண்டுவர அனுமதி கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். ஆனால் ரத்தின முதலியார் உண்ணா நோன்பு மேற்கொண்டு பிடிவாதம் செய்ய, வள்ளலார்  அரை மனதுடன் சம்மதித்தார். வள்ளல் பெருமான் இவ்வுலகை நீத்தது ஓர் அற்புதம். வடலூரிலுள்ள ஸித்தி வளாகத்தின் ஓர் அறைக்குள் போய் தாளிட்டுக்கொண்டார். அதற்கு  மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு, பிறகு அதிலும் பாதியளவு, கால்பாகம் என்று தம் ஆகாரத்தைக்  குறைத்துக்கொண்டே வந்தார்.

பிறகு உணவை முற்றிலுமாக நிறுத்திவிட்டு வெறும் கீரை மட்டும் உண்டு, பிறகு அதுவும் போய் குடிநீர்மட்டுமே அருந்தி வந்தார். தம் இழப்புக்குத் தயாராகும்படி சீடர்களைப் பக்குவப்படுத்தினார். 1874ம் ஆண்டு, ஜனவரிமாதம் 30ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அவர் முற்றிலுமாக உடலோடு மறைந்துபோனார்.

இறைவன் ஒளிமயமானவன், அவன் படைத்த மனிதனும் ஒளிமயமானவன். இதை உணர்த்துவதுதான் வடலூரில் வள்ளலார் நிறுவிய ஞானசபை. இதன் தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறம் பொற்சபை. இடதுபுறம் சிற்சபை. பஞ்ச பூத தத்துவங்களை குறிக்கும் ஐந்து படிகளை  கடந்தால் சதுரபீடம். அதில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் உள்ளது. அதன் முன் 7 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட நிலைக் கண்ணாடி.

நிலைக் கண்ணாடிக்கு முன்னால் பல வண்ணங்களில் ஏழு திரைகள். இந்த திரைகளை நீக்கி, நிலைக் கண்ணாடிக்கு பின் உள்ள தீபத்தை தரிசிப் பதே ஜோதி தரிசனம். கருப்புத் திரை மாயையையும் நீலத் திரை உயரிய நோக்கங்களுக்கு ஏற்படும் தடையையும் பச்சைத் திரை எல்லா உயிர்களிடமும் அன்பு, கருணை  உண்டு என்பதை அறியாதிருத்தலையும் சிவப்புத் திரை உணர்ச்சிகளை சீரமைக்காததையும் பொன் திரை ஆசையால் உண்டாகும் துன்பத்தையும்  வெள்ளைத் திரை அகங்காரத்தையும் இந்த ஆறு வண்ணங்களும் இணைந்த ஏழாவது திரை உலகப் பற்றுகளை சீரமைத்தல் என்ற தத்துவ உண்மை யையும் உணர்த்துகின்றன. இத்தனை திரைகளையும் நீக்கி, அகத்தில் ஒளி காண்பதே வள்ளலார் வகுத்த வழி.

நமது உடலில் உள்ள ஏழுவகை சுரப்பிகள் வெளியிடும் திரவம், ரத்தத்தில் கலந்து வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்று நாடிகளை இயக்குகிறது. இதன் மூலம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, மாவு சத்துகளை சமப்படுத்தி சீரான வெப்ப நிலையில் நமது உடலை ஆரோக்கியமாக  பாதுகாத்து வருகிறது. இந்த ஏழு சுரப்பிகளையும் ஏழு வண்ணத் திரைகளாக நமக்கு காட்டுகிறார், வள்ளலார். இயற்கைக்கு புறம்பாக, முறையற்ற பழக்க வழக்கங்களை  நாம் கடைப்பிடிக்கும்போது, இந்த சுரப்பிகளின் தன்மை மாறி உடல் நலக்கேடுகள் உண்டாகின்றன. தேவையற்ற எண்ணங்களையும் ஆசைகளையும்  நமது மனத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதற்கு மனத்தூய்மை வேண்டும். இந்த மனத்தூய்மையை தியானத்தால் மட்டுமே அடைய முடியும்.  இதையே வள்ளலார் ‘ஆன்ம விசாரணை’ என்கிறார். மனம் ஒருமைப்படும் பயிற்சிக்கு சுவாசம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இதை விளக்கும் வகையில் ஞானசபையை வடிவமைத்து, ஏழு திரை களை நீக்கிய பின் நிலை கண்ணாடி வழியாக ஜோதி தரிசனத்தை உருவாக்கி  தந்துள்ளார், வள்ளல் பெருமான். வான்வெளியில் சூரியன் வடகிழக்காக சஞ்சரிக்கிற காலம் உத்தராயண காலம் என அழைக்கப்படுகிறது. இது தை முதல் நாளில் தனது பயணத்தை துவக்குகிறது. இந்த கால கட்டத்தில் சூரிய பிரகாசம் அதிகரிக்கும். தைப்பூசம், பௌர்ணமி தினத்தில்தான் வரும். அன்றைய தினம் காஸ்மிக் எனர்ஜி எனப்படும் மெய்காந்த அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

தைப்பூசத்தன்று அதிகாலையில் கிழக்கில் சூரியனும் மேற்கில் முழு நிலவும் ஞான சபை நடுவில் உள்ள ஜோதியும் ஒரே நேர் கோட்டில் அமையும். தைப்பூச தினத்தில் மட்டுமே இது நிகழும். அதனால்தான் அன்றைய தினம் அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. வள்ளலார் என்கிற ஆன்மிக விஞ்ஞானி, ‘ஆன்ம விசாரணை என்ற தியானத்தை தினமும் செய்து வந்தால் மெய்காந்த அலைகளை பெற முடியும்’ என வலியுறுத்துகிறார். சென்னை-கும்பகோணம் சாலையில், கடலூர் மாவட்டம், வடலூரில் இருக்கிறது, வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை.

No comments:

Post a Comment