Contact Us

Name

Email *

Message *

Tuesday 11 March 2014

மயிலை அறுபத்துமூவர்


மயிலை அறுபத்துமூவர்

தில்லைவாழ் அந்தணர்:சித்திரை-முதல்நாள்-தில்லையில் வாழும் தீட்சதர்கள். தொகையடியார்களின் ஒன்பதுபேரில் முதலாவதாக வணங்கப்படுபவர்கள்.

1. 
திருநீலகண்ட நாயனார்:தை-விசாகம். குயவர்-சோழநாடு, சிதம்பரம். அயலறியா வண்ணிம் மனைவியின் சபதத்திற்கு உடன்படடு அவளைத் தீண்டாது, இளமையிலும் முதுமையிலும் இல்லறம் நடத்தி இறைவன் திருவருளால் இளமை பெற்றார்.

2. 
இயற்பகை நாயனார்:மார்கழி-உத்திரம். வணிகர்-சோழநாடு- காவிரிப்பூம்பட்டினம். சிவனடியார்க்குத் தம் மனைவியிடமே தானமாகக் கொடுத்தவர்.

3. 
இளையான் குடிமாற நாயனார்:ஆவணி-பூசம். வேளாளர் இளையான்குடி. விதைத்த நெல் எடுத்து அலங்கெரித்து அடியார்க்கு அமுது அளித்தல்.

4. 
மெய்ப்பொருள் நாயனார்:கார்த்திகை-உத்திரம் குறுநில மன்னர்-நடுநாடு, திருக்கோவலூர். வஞ்சித்துத் தம்மைக் கொல்லும் சிவவேடதாரியைக் காப்பாற்றித் தம் உயிரைவிட்டவர்.

5. 
விறன்மீண்ட நாயனார்:சித்திரை-திருவாதிரை. வேளாளர்-மலைநாடு, செங்குன்றூர். சுந்திர மூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுதற்குக் காரணமாய் இருந்தவர்.

6. 
அமர்நீதி நாயனார்:ஆனி-பூரம். வணிகர்-சோழநாடு, பழையாறை, கோவணத்திற்கு நிறையாக மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்மையும் சிவனடியார்க்குத் தந்தவர்.

7. 
எறிபத்த நாயனார்-மாசி-அஸ்தம். சோழநாடு, கருவூர். பூக்குடலையைச் சிவனடியாரிடமிருந்து பிடித்திழுத்துச் சிதறவைத்த பட்டத்து யானையை வெட்டியவர்.

8. 
ஏனாதினாத நாயனார்-புரட்டாசி-உத்திராடம். சான்றோர்-சோழநாடு, எயினனூர். போர் புரியும் பகைவன் நெற்றியில் திருநீற்றைக் கண்டதும் அவனார் கொல்லப்படும்படி நடந்து கொண்வர்.

9. 
கண்ணப்ப நாயனார்:தை-மிருகசீரிடம். வேடர்-தொண்டை நாடு-உடுப்பூர். ஆறே நாளில் அளவுகடந்த பக்திசெய்து காளத்தியப்பருக்குத் தம் கண்ணை அப்பியவர்.

10. 
குங்கிலியக் கலய நாயனார்:ஆவணி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருக்கடவூர். மனைவியின் மாங்கல்யத்தை விற்றும் குங்கிலியம் வாங்கியவர். சாய்ந்த லிங்கத்தைக் கழுத்தில் பூமாலை கொண்டு நிமிர்த்தியவர்.

11. 
மானக்கஞ்சாற நாயனார்:மார்கழி-சுவாதி, வேளாளர்-கஞ்சாறூர்-திருமணம் தொடங்கும்போது திருமணப் பெண்ணாகிய தமது மகளின் தலைமயிரை அறுத்துச் சிவனடியாருக்குத் தந்தவர்.

12. 
அரிவட்டாய நாயனார்-தை-திருவாதிரை. வேளாளர்-சோழநாடு, கணமங்கலம். சிவ நிவேதனத்துக்குரிய பொருள் கீழே சிந்தியதற்காகத் தமது கழுத்தை அரித்து கொண்டவர்.

13. 
ஆனாய நாயனார்:கார்த்திகை-அஸ்தம். இடையர்-மழநாடு, மங்களவூர், பசு மேய்க்கும் போது, ஜந்தெழுத்தைப் புல்லாங்குழலில் அமைத்துவாசித்தவர்.

14. 
மூர்த்திநாயனார்-ஆடி-கிருத்திகை. வணிகர்-பாண்டியநாடு, மதுரை. சந்தனம் தருகின்ற திருப்பணியில் முட்டுப்பாடு நேரவே, முழங்கையை அரைத்தவர். திருநீறு, உத்திராட்சம், சடைமுடி ஆகிய மூம்மையால் உலகாண்டவர்.

15. 
முருக நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருப்புகலூர். மலர்த்தொண்டு செய்து திருஞான சம்பந்தர் திருமணத்தில் முக்தி பெற்றவர்.

16. 
உருத்திர பசுபதி நாயனார்:புரட்டாசி-அஸ்வினி. அந்தனர்-சோழநாடு. திருத்தலையூர். இரவும் பகலும் திருக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று ஸ்ரீ ருத்ர மந்த்ரம் ஜபித்தவர்.

17.
திருநாளைப்போவார் நாயனார்: புரட்டாசி-ரோகினி (நந்தனார்) புளையர்- சோழநாடு. ஆத்தனூர். தில்லை நடராஜப் பெருமானைப் காணவிரும்பித் தீப் புகுந்து முனிவராய் எழுந்து சிற்றம்பலவன் திருமுன்பு மறைந்தவர்.

18. 
திருக்குறிப்புதொண்ட நாயனார்:சித்திரை-சுவாதி. ஏகாலீயர்-தொண்டைநாடு காஞ்சீபுரம். சிவனடியார்க்கு வாக்களித்தபடி மழையின் காரணமாக உடையை துவைத்து உலர்த்தித்தர முடியாமல் போனதால் தமது தலையை கல்லின்மீது மோதிக் கொண்டவர்

19. 
சண்டேஸ்வர நாயனார்:தை-உத்திரம். அந்தணர்-சோழநாடு, திருச்சேயஞ்ஞலூர் அபிஷேகப்பாற்குடத்தை இடரியை தந்தையின் காலை வெட்டித் தொண்டர்க்கு தலைவனாக (சண்ணிப் சப்பதம்) இருக்கும் அருள் பெற்றவர்.

20. 
திருநாவுக்கரச நாயனார்:சித்திரை-சதயம், வேளாளர்-நடுநாடு, திருவாமூர், ஐந்தெழுத்து ஒதி கருங் கல்லின்மேல் கடலில் மிதந்து கரையேரிப் பல தேவாரப்பாடல்கள் பாடி கைத்தொண்டு செய்து முக்தி பெற்றவர்.

21. 
குளச்சிறை நாயனார்:ஆவணி-அனுஷம், பாண்டிய நாடு-மனமேற்குடி, அரசன் சமணனாய் இருந்தபோதும் தாம் சிவனடியாரை வழிபட்டார். திருஞானசம்பந்தரை அழைத்துவந்து அரசனையும் நாட்டினையும் சைவ மாக்கியவர்.

22. 
பெருமிழலைக் குரும்ப நாயனார்:ஆடி-சித்திரை, பெருமிழலையூர் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளை வழிபட்டு, அவர் கயிலை செல்வதையறிந்து யோகத்தால் தானும் கயிலை சென்றவர்.

23. 
காரைக்கால் அம்மையார்:பங்குனி-ஸ்வாதி (பேயார்) , வணிகர்-சோழநாடு. காரைக்கால், சிவபெருமானை வேண்டி மாம்பழம் பெற்றவர். பேய் வடிவம் பெற்றவர். ஆலங்காட்டில் ஈசனாடலையும் பெற்றவர்.

24. 
அப்புதியடிகள் நாயனார்:தை-சதயம். அந்தணர்-சோழநாடு. திங்களூர். பிள்ளை இறந்ததையும் மறைத்து திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு அமுது அளித்தவர்.

25. 
திருநீலநக்க நாயனார். வைகாசி-மூலம்:அந்தணர்-சோழநாடு. சாத்தமங்கை. அன்போடு சிவலிங்கத்தின் மீதிருந்த சிலந்தியை ஊதியதால் எச்சில் பட்டதென்று மனைவியை விட்டுச்சென்றவர். பாணர்க்கு வேதிகையில் இடம் தந்தவர். திருஞானசம்பந்தர் திருமணத்தை நடத்தி முக்தி பெற்றவர்.

26. 
நமிநந்தி அடிகள் நாயனார்:வைகாசி-பூசம். அந்தணர்-சோழநாடு. ஏமப்பேறூர். தண்ணீரால் விளக்கெரித்தவர். திருவாரூர்ப் பிறந்தாரை எல்லாம் சிவசாரூப்பியராகக் கண்டவர்.

27. 
திருஞானசம்பந்த நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு. சீகாழி. உமாதேவியாரால் ஞானப்பால் ஊட்டப்பெற்றவர். தேவாரம்பாடி எலும்பைப் பொன்னாக்கியவர். பல அற்புதங்கள் செய்த இவர் தமது திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் முக்தி தந்தவர்.

28. 
ஏயகோன் கலிக்காம நாயனார்:ஆனி-ரேவதி. வேளாளர் சோழநாடு திருப்பெரும் மங்களம். சிவபெருமானைப் தூதராகவிடுத்த வண்றொண்டரை இகழ்ந்து பின்பு திருவருள் விளையாட்டால் அவருடைய நண்பரானவர்.

29. 
திருமூல நாயனார். ஐப்பசி-அசுவினி:இடையர்-சோழநாடு, சாத்தனூர். மூலன் உடலில் தாம் புகுந்து, மூவாயிரம் ஆண்டிருந்து, திருமந்திரம் அருளிச் செய்தவர்.

30. 
தண்டியடிகள் நாயனார்-பங்குனி-சதயம். சோழநாடு-திருவாரூர். பிரவிக் குருடாக இருந்தும் திருவாரூர் குளத்தை, கரையில் குச்சி கட்டி, இடையே கயிறு கட்டி திருக்குளப்பணி செய்து குருடு நீங்கிச் சமணரை வென்றவர்.

31. 
மூர்க்க நாயனார்-கார்த்திகை, மூலம். வேளாளர், தொண்டைநாடு, திருவேர்க்காடு. சூதாட்டத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்தவர்.

32. 
சோமாச்சிமாற நாயனார்-வைகாசி-ஆயில்யம். அந்தணர். சோழநாடு. திரு அம்பர். வேத வேள்வி செய்து, சாதிமத பேதமின்றி, பஞ்சாட்சரவிதிப்படி அடியயார்களுக்கு அன்னதானம் செய்தவர்.


33. 
சாக்கிய நாயனார்:மார்கழி-பூராடம். வேளாளர்-திருச்சங்கமங்கை. சமணக் கோலமாயினும் மனதார சிவபூசை செய்தவர். மனதில் மலராக எண்ணி இறைவ மீது இட்டகற்களை இறைவன் மீது இட்டகற்களை இறைவன் மலராக ஏற்று அருள் பெற்றவர்.

34. 
சிறப்புலி நாயனார்-கார்த்திகை-பூராடம். அந்தணர்-சோழநாடு. திரு ஆக்கூர். குல ஆசாரவிதிப்படி, வேதம் ஒதியும், ஒதுவித்தும், சிவனடியைச் சிந்தித்தும் அடியார்கட்கு, அமுதும் பொருளும் தந்தவர்.

35. 
சிருத்தொண்ட நாயனார்-சித்திரை-பரணி. மாமாத்திரப் பிராமணர்-சோழநாடு, திருச்செங்காட்டாங்குடி வாதாவியைப் போரில் வென்றவர். சிவனடியார்க்குத் தமது ஒரே பிள்ளையைக் கறியாகச் சமைத்து வைத்தவர்.

36. 
சோமான் பெருமாள் நாயனார்-ஆடி, சுவாதி (கழறிற்றறிவார் நாயனார்) அரசர், மலைநாடு, கொடுங்கோளூர். நடராஜர் பாதச் சிலம்பொலி கேட்கக் காலம் தகுந்தமையால் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகள் தோழமை பெற்றவர். சிவ பெருமானுடைய திருமுகப் பாசுரம் பெற்றவர். கயிலை சென்று ஞானவுலா பாடியவர்.

37. 
கணநாத நாயனார்-ஆடி-திருவாதிரை. அந்தணர், சோழநாடு, சீர்காழி. சிவனடியாரைப் போற்றுவதோடு, சிவநெறிப் பணிகள் செய்பவருக்கு பயிற்சி அளித்தவர். திருஞான சம்பந்தரை வழிபட்டவர்.

38. 
கூற்றுவ நாயனார்-ஆடி-திருவாதிரை. குறுநில மன்னர், திருக்களத்தை. தில்லைவாழ் அந்தணர் தமக்கு முடிசூட்ட மறுக்கவே, தில்லையம்பலவன் திருவடிகளையே முடியாகச் சூடப்பெற்றவர்.

39. 
புகழ்ச்சோழ நாயனார்:ஆடி-கிருத்திகை. அரசர் சோழநாடு. உறையூர். பகைவனது அறுபட்ட தலையில் சிவ சின்னமாகிய சடையிருப்பதைக் கண்டு அஞ்சி உயிர்விட்டவர்.

40. 
நரைசிங்க முனையரைய நாயனார்-புரட்டாசி-சதயம். குருநில மன்னர்-நடுநாடு. சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்தவர். திருவாதிரை தோறும் சிவனடியார்களுக்கு அன்னமிடுவதுடன் 100 பொற்காசுகள் வழங்குவார். சிவவேடம் பூண்ட காமக்குறி மலர்ந்த தூதர்களையும் வணங்கியவர்.

41. 
அதிபந்த நாயனார்-ஆவணி-ஆயில்யம். நுளையர் (மீன் பிடிப்பவர்) சோழநாடு-நாகப்பட்டினம். நவரத்தினம் இழைத்த பொன்மீனைத்தாமே வைத்துக் கொள்ளாமல் சிவார்பணம் செய்தவர்.

42. 
கலிக்கம்ப நாயனார்-தை-ரேவதி. வணிகர்-நடுநாடு. பெண்ணாடகம். தமது பழைய வேலையாள் சிவனடியாராக வந்தபோது, தாம் அவனை வழிபட்டு, வழிபடாத தமது மனைவி கையை வெட்டியவர்.

43. 
கலிய நாயனார்:ஆடி-கேட்டை. செக்கர்- (எண்ணெய் வியாபாரி) தொண்டைநாடு-திருவெற்றியூர். திருவிளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாததால் தமது இரத்தத்தைக் கொண்டு எரிக்க முயன்றவர்

44. 
சக்தி நாயனார்-ஐப்பசி-பூசம். வேளாளர்-சோழநாடு. வரிஞ்சியூர். சிவனடியாளர்களைக் குறை கூறுபவர்களின் நாக்கை அறுத்தவர்.

45. 
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்-ஐப்பசி-மூலம். குறுநில மன்னர்- தொண்டைநாடு. காஞ்சிபுரம். பதவியை வெறுத்துத் தலையாத்திரை செய்தவர். க்ஷேத்திர வெண்பாவால் நிலையாமையைக் கூறியவர்.

46. 
கணம்புல்ல நாயனார்-கார்த்திகை-கிருத்திகை. இருக்குவேளூர். புல்விற்று நெய்கொண்டு திருவிளக்கெரித்தவர். நெய்யின்மையால் திருப்புலீஸ்வர சிவன் சன்னதியில் தமது தலைமயிரை விளக்காக எரித்தவர்.

47. 
காரிநாயனார்-மாசி-பூராடம்.. சோழநாடு. திருக்கடவூர். கோவைப்பாடி பொருள்பெற்று, ஆலயப்பணி செய்தவர்.

48. 
நின்றசீர் நெடுமாற நாயனார்-ஐப்பசி-பரணி. அரசர்-பான்டிய நாடு. மதுரை. திருஞானசம்பந்தர் தந்த திருநீற்றால் சுரம் நீக்கியவர். அவர் திருவாக்கால், கூன் நிமிரப்பெற்று சைவரானவர்.

49. 
வாயிலார் நாயனார்-மார்கழி-ரேவதி. வேளாளர், தொண்டைநாடு-மயிலாப்பூர். மானசீகமான ஞானபூஜை செய்தவர்.

50. 
முனையடுவார் நாயனார்-பங்குனி-பூசம். வேளாளர், சோழநாடு, திருநீடூர். கூலிக்குப் போர் செய்து அக்கூலிகொண்டு சிவனடியாரை வழிபட்டவர்.

51. 
கழற்சிங்க நாயனார்-வைகாசி-பரணி. குறுகிய மன்னர்-சிவபூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் தமது மனைவியின் மூக்கை ஒரு சிவனடியார் அறுத்த தண்டனை போதாது என்று, அவள் கைகளையும் வெட்டியவர்.

52. 
இடங்கழி நாயனார்-ஐப்பசி-கார்த்திகை. அரசன்-கோனாடு, கொடும்பாளூர். அடியார் வழிபாடு செய்ய நெய் நெல் திருடினவர்க்கு மேலும் பொருளும் நெல்லும் தந்தவர்.

53. 
செருத்துணை நாயனார்-ஆவணி-பூசம். வேளாளர், சோழநாடு, தஞ்சாவூர். கழற்சிங்க நாயனாருடைய மனைவி, பூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் அவர் மூக்கை அரித்தவர்.

54. 
புகழ்த்துணை நாயனார்-ஆவணி-ஆயில்யம். ஆதிசைவர். செருவிலிபுத்தூர். சிவபூஜைக்கு உதவியாக அரிசிற்கரைப்புத்தூர் சிவபெருமானால் பஞ்சகாலத்தில் காசு அளிக்கப்பெற்று தொண்டு செய்தவர்.

55. 
கோட்புலி நாயனார்-ஆடி -கேட்டை. வேளாளர். சோழநாடு. திருநாட்டியத்தான்குடி. சிங்கடி, வனப்பகை என்ற இரண்டு புதல்வியரைத் சுந்தர மூர்த்தி ஸ்வாமிக்கு அரிப்பணம் செய்தவர். சிவபூஜைக்குரிய நெல்லையுன்ட சுற்றத்தார் அனைவரையும், குழந்தை உட்பட அனைவரையும் கொன்றவர்.

56. 
பூசலார் நாயனார்-ஐப்பசி-அனுஷம். அந்தணர். தொண்டைநாடு. திருநின்றவூர். மனத்தினாலேயே கோயில்கட்டிச் சிவ வழிபாடு செய்தவர்.

57. 
மங்கையர்க்கரசியார்-சித்திரை-ரோகினி. (மாணியார்) அரசியார், பாண்டியநாடு, திருஞானசம்பந்தரை வரவழைத்துத் தமது கணவரையும், பாண்டிய நாட்டையும் சைவமாக்கியவர்.

58. 
நேச நாயனார்-பங்குனி-ரோகிணி. சாலியர்-கம்பீரநகரம் சிவனடியார்களுக்கு உடையும் கோவணமும் செய்து கொடுக்கும் பணியைச் செய்தவர்.

59. 
கோச்செங்கட்சோழ நாயனார்:மாசி-சதயம். அரசர் சோழநாடு. எழுபது சிவாலயங்கள் கட்டியவர். முப்பிறவியில் சிலந்தியாகப் பூஜை செய்தவர்.

60. 
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்-வைகாசி-மூலம். பாணர், நடுநாடு- திருஎருக்கத்தம்புலியூர், திருஞானசம்பந்தருடன் சென்று, யாழ்த்தொண்டு புரிந்தவர்.

61. 
சடைய நாயனார்-மார்கழி-திருவாதிரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர். சுந்திரமூர்த்தி சுவாமிகளைப் பிள்ளைகளாகப் பெற்றவர். அவருக்குச் சடங்கவி சிவாச்சாரியார் புதல்வியைத் திருமணம் செய்விக்க முயற்சித்தவர்.

62. 
இசைஞானியர்-சித்திரை-சித்திரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர், சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளைப் பிள்ளையாகப் பெற்று வளர்த்த பெண்மணியார்.

63. 
சுந்தரமூர்த்தி நாயனார்-ஆடி-சுவாதி. ஆதிசைவர், நடுநாடு-திருநாவலூர். திருத்தொண்டர் தொகைபாடியவர். இறைவனைத் தூது அனுப்பியவர். முதலையுண்ட மகனை வருவித்தவர்.

பங்குனிப்பெருவிழா சிறப்பு 

திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவரது மகள் பூம்பாவையை, ஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க முடிவு செய்தார். இந்நேரத்தில் மலர் பறிக்கச்சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிர் இழந்தாள். அவளை தகனம் செய்த சிவநேசர், அஸ்தியையும், எலும்பையும் ஒரு குடத்தில் போட்டு வைத்துவிட்டார்.சம்பந்தர் இங்கு வந்ததும் நடந்ததை அறிந்து, சாம்பல் வைத்திருக்கும் குடத்தை கொண்டு வரக் கூறினார்.

கோவிலின் வெளிப்புறத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்ட அந்த குடத்தின் முன் நின்று சம்பந்தர், "மட்டிட்ட புன்னையங் கானல் என்ற பதிகத்தைப் பாடினார். மொத்தம், 11 பாடல்கள்* உள்ள இந்தப் பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும், மயிலையில் ஓராண்டில் ஒவ்வொரு மாதத்திலும் நடக்கும் விழாக்களை சம்பந்தர் குறிப்பிட்டு, அந்த விழாக்களைப் பார்க்காமல் போய்விட்டாயே என பாடினார். 

பத்தாவது பாடல் முடியும்போது, குடத்தில் இருந்து பூம்பாவை முழுமையாக உருப்பெற்று, உயிருடன் எழுந்து வருகிறாள். மகிழ்ச்சி அடைந்த செட்டியார், அவளை மணந்து கொள்ளும்படி சம்பந்தரை வேண்ட, அவரோ தாம் அவளுக்கு மீண்டும் உயிர் தந்ததால், தந்தை முறையாவேன் எனக் கூறி மறுக்கிறார். அப்போது சம்பந்தருக்கு 16 வயது என்கிறது பெரியபுராணம். இந்த அற்புத செயலை நினைவு கூர்வதற்காகத் தான் இந்தப் பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. 

சம்பந்தரின் இந்த அற்புதச் செயல், ஆண்டு தோறும் எட்டாம் நாள் அன்று காலையில், தெப்பக் குளக்கரையில் நடத்தி காட்டப்படும். அதன் தொடர்ச்சியாகவே, அன்று மாலை அறுபத்துமூவர் திருவிழா நடைபெறும். மற்ற தலங்களில், ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களில், வழக்கமாகவே அறுபத்து மூவர் எழுந்தருளல் உண்டு. ஆனால், மயிலையில் மட்டும் சம்பந்தரின் அற்புதச் செயலோடு இணைத்து இந்த விழா நடப்பதால் பிரபலமாகியிருக்கிறது.

*இரண்டாம் திருமுறை - திருஞானசம்பந்தர் தேவாரம்

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். 01

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய். 02

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய். 03

ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். 04

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். 05

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடலானே றூரும் அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். 06

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய். 07

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய். 08

நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய். 09

உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய். 10

கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே. 11



நன்றி: காஞ்சி ஸ்ரீமடம்.

No comments:

Post a Comment