Contact Us

Name

Email *

Message *

Saturday 14 June 2014

தலை நாடி பற்றிய தவறான கருத்து

தெய்வத்தின் குரல் (ஆறாம் பாகம்).

ன்னொரு ஸமாசாரம்: ஹ்ருதயத்திலிருந்து சிரஸுக்குப் போகிற நாடி பற்றியது. உத்தராயண மரணத்தைப் பற்றி ஸரியான அபிப்ராயம் இல்லாதது போலவே இதைப் பற்றியும் இருக்கிறது. உத்தராயண மரணம் என்பது வாஸ்தவத்தில் அதற்கேற்பட்ட தேவதைகளுடைய ஸ்தானம் வழியாகப் போவது என்று தெரிந்த விஷயஜ்ஞர்களுங்கூட (ரொம்பப் பெரியவர்கள், ஆசார்ய பாஷ்யங்களை இன்னம் விளக்கமாக புரியவைப்பதற்காக அவற்றுக்கு வ்யாக்யானம் எழுதிய பல பேர்கூட) இந்த நாடி விஷயத்தில் ஸரியான அபிப்ராயமில்லாமலே இருக்கிறார்கள். அதாவது, எல்லாரும் அந்த நாடியை யோக சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் ஸுக்ஷும்னை என்றே நினைக்கிறார்கள்.

ஆனால் இது அந்த ஸுக்ஷும்னை இல்லை. அது (யோக சாஸ்திர ஸுக்ஷும்னை) முதுகுத் தண்டின் அடியில், மூலாதாரம் என்கிற இடத்திலிருந்து புறப்பட்டு நேர் மேலாக சிரஸுக்குப் போவது. உபநிஷத்துக்களிலும் பிரம்ம ஸுத்ரத்திலும் சொல்லி நாம் பார்த்ததோ ஹ்ருதயத்திலிருந்து புறப்படுவது. மூலாதாரத்திலிருந்து புறப்படும் ஸுக்ஷும்னையில் ப்ராண சக்தியை ஏற்றிக்கொண்டு போவது அதற்கென்று ஸாதனை பண்ணும் யோகிகளை மட்டுமே குறித்த விஷயம். அவர்கள் லோகாதார சக்தியைப் பிடித்து அதன் வழியாக சிரஸிஸ் சிவத்தில் ஐக்யமாகிறவர்கள். அது ஒரு குறிப்பிட்ட யோக ஸமாசாரம். ஒளபநிஷதமான (உபநிஷத்துக்களின் ஆதாரத்தில் அமைந்த) நம்முடைய வேதாந்த மதம் அந்த ஸமாசாரங்களைத் தொடுவதில்லை.

அது ச்வாஸம், சக்தி என்று சுற்றி வளைத்துக்கொண்டு போகாது. நேரே சின்ன நானைத் தள்ளி, இருக்கிற ஒரே நானாக ஆகவேண்டும் என்று ஸ்ட்ரைட் குறி வைத்து, ஞான விசாரத்தில் அலசி அந்த லக்ஷ்யத்தை அநுபவமாக்கிக் கொள்ளவே வேதாந்தம் வழிகாட்டும்.........ஹ்ருதயத்திலிருந்து புறப்படுவதாக வேதாந்தத்தில் சொல்லியுள்ள நாடிகள் ஜன ஸமூஹம் முழுவதற்கும் வாழ்க்கை நடப்பது, முடிவது முதலியவற்றுடன் ஸம்பந்தப்பட்டவை. அவற்றிலே உத்கிருஷ்டமாக இருப்பது தான் சிரஸுக்குப் போகிறது. அதை உபநிஷத, ப்ரஹ்ம ஸுத்ரங்களில் ஒரு இடத்திலும் ஸுக்ஷும்னா என்று சொல்லியிருக்கவேயில்லை. மூர்த்த நாடி-அதாவது சிரஸில் இருப்பது, அங்கே முடிவது-என்றுதான் சொல்லியிருக்கிறது. ஆசார்யாளும் பாஷ்யத்தில் அப்படியேதான் சொல்லியிருப்பார். முக்யமாக இந்த விஷயம் வருகிற சாந்தோக்ய ப்ருஹதாரண்யக, ப்ரஹ்ம ஸுத்ர பாஷ்யங்களில் ஆசார்யாள் 'ஸுக்ஷும்னை' என்று சொல்லவேயில்லை. கீதையிலும் 'மூர்த்ன்யாத்மன: ப்ராணம்' என்பதாக சிரஸில் பிராணனைச் சேர்த்து வைத்து அந்த வழியாக தேஹ வியோகமாவதைச் சொல்கிற இடத்தில் மூலம், பாஷ்யம் இரண்டிலுமே ஸுக்ஷும்னையைப் பற்றிப் பேச்சில்லை ஆசார்யாள் ஒவ்வொரு உபநிஷத்தாக பாஷ்யம் பண்ணிக் கொண்டு போகும்போது முதலில் வரும் கடோபநிஷத், ப்ரச்நோபநிஷத், தைத்திரீயம் ஆகியவற்றில் மட்டும் ஸுக்ஷும்னா என்று சொல்லியிருக்கிறார். அதோடு தைத்திரீயத்தில் ஹ்ருதயத்தை நம் எல்லாருக்கும் தெரிந்த நல்ல ஸ்தூலமான அவயமாகவே கூடச் சொல்லியிருக்கிறார். ஏன் அப்படியென்றால்..............

ஞான வழிக்காரன் உச்சிக் கட்டத்தில் அஹங்கார நசிப்புக்காக பக்தி பண்ணுகிறபோது மனஸும் புத்தியும் அஹங்கார ஸ்தானமான ஸெமி-ஸ்தூல ஹ்ருதயத்திற்கு வருவது, ஹ்ருதயம் ஸுக்ஷ்ம பூதமான ப்ரேமையாலேயே ரொம்பி அஹங்காரம் மெல்லிசாவது, அப்புறம் மத்ய த்வாரத்திற்குள்ளே போய் ஒடுங்குகிறது - என்று சொன்ன இந்த process எல்லாம் அவனுக்குத் தெரியாமலேதான் நடக்கிறது!ஆத்மா நிர்குணமானது என்றால் மனஸுக்கு அதில் பிடிப்பு இல்லாமல் vague -ஆக இருப்பதால், குரு சொல்லிக் கொடுத்தபடி மூச்சுக்கு, எண்ணத்திற்கு எங்கே வேர் என்று தெரிகிறதோ அந்த பாயின்டில் அது இருப்பதாக அவன் வைத்துக் கொண்டு அதில் கான்ஸன்ட்ரேஷனை வைப்பதோடு ஸரி. அதுதான் ஹ்ருதய மத்தி என்றும் குரு சொல்லி அவன் தெரிந்து கொண்டிருப்பான். ஆனாலும் வாஸ்தவமாகவே அவனுடைய சித்தம் நன்றாக நிற்பதோடு ஸரி, வாஸனைகள் முழுக்கத் தீர்ந்து, அஹங்காரம் முழுக்க அழிவுபட்ட அப்புறந்தான் நிலையாக நின்று, நின்றே போவது. 'நின்று' என்றால் 'ஸ்டான்ட்' பண்ணுவது, 'ஸ்டாப் ஆவது' என்று இரண்டு அர்த்தம் இருக்கோல்லியோ? அதில் முதல் அர்த்தத்தில் ஆரம்பித்து இரண்டாவதில் முடிவது. அப்படி முடிவதற்குள் ஹ்ருதயம், நாடி முதலியன ஸம்பந்தமாக நடக்கிற 'ப்ராஸஸ்' அவனுக்குத் தெரிந்து நடப்பதில்லை. அதாவது அது அவன் கவனத்திற்கு வரவே வராது. அவனுடைய ஒரே கவனம், ஒரே குறி அவன் பாவனையாக பிடித்துக் கொண்டிருக்கிற ஸ்தானத்தில் வாஸ்தவமாகவே ஆத்ம ஸ்புரணம் ஏற்படுவதில்தான் இருக்கும்? இருக்க வேண்டும். ஸாக்க்ஷாத்காரம் ஒன்றே குறி என்று அதே தியானமாகத்தான் அவன் இருப்பான்; இருக்கணும். அதற்குப் போகும் வழி என்று எதையோ கவனித்தால் அது 'டிஸ்ட்ராக்ஷன்' தான் (திசை திருப்பல்தான்) வழியைக் கவனித்தால் லக்ஷ்யமே போய்விடும்!அப்புறம் வழியும் போய்விடும்! பழைய குருடி என்று அலைபாய்கிற மனஸோடு நிற்கவேண்டியதுதான்.

அம்பாள் அதோ அங்கே ஆவிர்பவித்திருக்கிறாள் என்று யாரோ சொல்கிறார்களென்று வைத்துக் கொள்ளுவோம். உடனே என்ன பண்ணுவோம்? மானஸிகமாக அப்போதே அவன் இருக்கிற ஸ்தானமாக ஒரு இடத்தைப் பற்றி நமக்கு ஒரு பிடிப்பு உண்டாகிவிடும். மானஸிகத்தை வாஸ்தவமாக்கிக் கொள்வதற்காக அந்த இடத்திற்கு ஓட்டமாக ஓடுவோம்! அப்போது போகிற ரோட் என்ன தார் ரோடா, கப்பியா என்றெல்லாமா கவனித்துக் கொண்டிருப்போம்?

ஆகையினால் ஸித்தியடைந்த ஒரு ஞானியிடம் போய் வேதாந்தம் சொல்கிற ஹ்ருதயம், நாடி, த்வாரம் என்றெல்லாம் கேட்டால் அவர் ஒன்றும் சொல்ல மாட்டார்! தன் ஸமாசாரமே தெரியாத அவருக்கு உபாஸகர், பாமர ஜனங்கள் ஆகியவர்களுடைய ஸமாசாரமும் தெரியாதுதான். தான் வந்து ரோடைப் பற்றியே தெரியாதவனுக்கு அதன் ஓரத்திலே என்ன கடை கட்டிடங்கள் இருந்தது, அடுத்த ரோடில் என்ன இருந்தது என்றெல்லாம் தெரியுமா என்ன?

ஆனால் மஹா ஞானிகளான ரிஷிகள்தானே இதெல்லாம் உபநிஷத்துக்களிலேயே சொல்லியிருக்கிறார்களென்றால், அந்த ரிஷிகள் ஞானம் அடைந்த பிற்பாடு, ஒரு தரம் அடைந்த பிறகு ஒருபோதும் நழுவ முடியாத ஸித்தியைப் பெற்ற பிற்பாடு, பரமாத்மாவே தன்னுடைய ஸ்ருஷ்டி விசித்ரங்கள், ரஹஸ்யங்கள் ஆகியவற்றை அவர்களுக்குத் தெரிவித்துப் பெருமைப்படும் போதுதான் இந்த ப்ராஸெஸ் - இது மட்டுமில்லாமல் உபாஸகர்களுக்கான ப்ராஸெஸ், பாமரர்களுக்கான ப்ராஸெஸ் எல்லாமும் தெரியப்படுத்தியிருக்கிறான். அவன் என்னவெல்லாம் வேடிக்கைகள், அதிசயங்கள் பண்ணுகிறான் என்கிற ரஸாநுபவத்தில் அவர்கள் மற்றவர்களுக்கும் தெரியப் படுத்தியிருக்கிறார்கள்.

மற்றவர்களிடம் விஷயம் போன பிற்பாடு கொஞ்சம் குழறும்படியும் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மாயை 'டச்' எதிலும் வரத்தானே செய்கிறது? அதனால் குழப்பம் தெளிய யாராவது ஞானியிடம் போகலாமென்றால் அவனுக்கோ அந்த ஸமாசாரமே தெரியாமலிருக்கிறது! அல்லது எந்த அளவுக்குப் பரமாத்மா தெரிவித்து, விட்டு விடுகிறானோ, அவ்வளவுதான் தெரிகிறது! அதற்கு மேல் தெரிந்து கொள்ளணுமென்று இவனுக்கும் (ஞானிக்கும்) இல்லை! அந்த அளவுக்குக்கூட அவன் தெரிவிக்கிறானே என்பதால் இவன் தெரிந்துகொண்டானே தவிர இவனுக்காக அதில் 'இன்டரெஸ்ட்' இல்லை!இப்படியானால், குழப்ப அறிவே ஸரியான அறிவு மாதிரி இருந்து கொண்டிருக்க வேண்டியதுதானே?

அந்த மாதிரி, ஹ்ருதயத்திலிருந்து சிரஸுக்குப் போகிற மூர்த்த நாடியை யோக சாஸ்திரத்தின் ஸுக்ஷும்னையாகப் பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த ஸமயத்தில் ஆசார்யாள் அவதாரம் பண்ணினார். அவர் பிறக்கிறபோதே ஸர்வஜ்ஞர்; அவருக்கு தெரியாத விஷயமில்லை என்றாலும் மநுஷராக வந்து மநுஷர்களுக்கு வழிகாட்டுகிறபோது குருமுகமாக வித்யாப்யாஸம் பண்ணித்தான் தமக்கு எதுவும் தெரிந்த மாதிரி பண்ணிக் காட்டினார். முதலில் ப்ரம்மச்சாரியாக குருகுலவாஸத்தில் பல சாஸ்திரங்களைப் படித்து, அப்புறம் ஸந்நியாஸி குருவிடமிருந்து ப்ரம்மவித்யா சாஸ்திரத்தை ஸ்வீகாரம் பண்ணிக் கொண்டார். அதற்கப்புறம் குருவின் ஆக்ஞைப்படி பாஷ்யங்கள் எழுதினார்.

அப்படி எழுதினபோது ரொம்பவும் விநயமாக ஒன்று பண்ணினார். என்னவென்றால், தாமே அநுபவியாகவும் ஸர்வஜ்ஞராகவும் இருந்தபோதிலும் அவர் ஸொந்த அநுபவத்தின் பேரில் ஸொந்த அறிவின் பேரில் எதையும் சொல்லாமல் சாஸ்திர, ஸம்பிரதாய சிஷ்டாசாரங்களின் அடிப்படையிலேயே, அவற்றால் அங்கீகரிக்கப்பட்ட விஷயங்களையே சொன்னார். ஸொந்த ஹோதாவில் சொன்னால் தமக்கு நடக்கிறமாதிரியே எல்லாருக்கும் நடக்குமானால்தானே அது ஸரியாக வரும்? அப்படி எங்கேயாவது நடக்குமா? ஸொந்த ஹோதாவிலேயே சொன்னதால்தானே பௌத்த ஜைனாதி தர்சனங்கள் லோகம் முறை தப்பிப் போகும்படிப் பண்ணி, ஸரி செய்ய நாம் வந்திருக்கிறோம்?' என்று நினைத்து தம்மை அடக்கிக் கொண்டு, தம் மூலமாக ட்ரெடிஷனையே பேச விட்டார். அப்போது ஆத்மாபிவிருத்திக்கு ஸம்பந்தமில்லாத விஷயங்களில் 'ட்ரெடிஷனல் பிலீஃப்' ஸரியில்லாவிட்டால்கூட, 'அதில் கை வைக்க வேண்டாம்; தாம் கை வைத்தால் மற்றவர்களுக்கும் இடம் கொடுத்துப் போய் கெட்டுவிடும்' என்று நினைத்து வழக்கில் வந்த நம்பிக்கைகளை அநுஸரித்தே தாமும் சொல்லிக் கொண்டு போனார்.

வேதாந்த சாஸ்திரம் சொல்லும் ஹ்ருதயம், நாடிகள் ஸமாசாரம் அப்படிப்பட்ட ஒன்றுதான். அதுகளைப் பற்றித் தெரிந்து கொள்வதால் ஒருவித ஆத்ம லாபமுமில்லை; தெரியாததால் நஷ்டமுமில்லை. யோக சாஸ்திரங்கள் சொல்லும் ஸுக்ஷும்னை முதலான நாடிகளுக்கும் இதற்கும் இது ஒரு பெரிய வித்யாஸம். அங்கே (யோக சாஸ்திரங்களில்) இப்படியிப்படி அப்யாஸம் பண்ணி இன்னின்ன நாடியில் ப்ராண சக்தியின் ஸஞ்சாரத்தை உண்டாக்கி, ஏற்றி கீற்றி, எல்லாம் பண்ணி, இன்னின்ன பலன் அடைந்துகொள் என்று ஜீவன் அவற்றைக் குறித்துச் செய்யக்கூடியதாகப் பல விஷயம் சொல்லியிருக்கிறது. அவற்றில் ஆத்மாபிவிருத்திக்கானவையும் உண்டு. ஆனால் நம்முடைய வேதாந்த சாஸ்திர நாடிகள், ஹ்ருதயம், மத்ய த்வாரம் இவை விஷயமாக ஒருத்தன் என்னவும் பண்ணி என்ன பலனும் பெற முடியாது. இவனுடைய வாழ்க்கை முறை எப்படியிருக்கிறதோ, உபாஸனையும் ஆத்ம விசாரமும் எப்படியிருக்கிறதோ அதற்கேற்க இவனுடைய ஜீவபாவம் ஆடோமேடிக்காக அந்த நாடிகளில் அல்லது மத்ய ஸ்தானத்தில் சேரும். அவ்வளவுதான். யோக சாஸ்திரத்தில், நாடிகளில் ஒருத்தன் தன் முயற்சியால் உண்டாக்குகிற பிராண ஸஞ்சாரங்களாலேயே அவனுடைய வாழ்க்கையும் ஸாதனையும் ரூபமாகின்றன. வேதாந்தத்திலோ அவனுடைய வாழ்க்கை முறையையும் ஸாதனையையும் பொறுத்தே அவன் வசமில்லாமல் நாடி இத்யாதிகளில் சிலது நடக்கிறது. ஆகையால் அந்தச் சிலதைத் தெரிந்து கொள்வதால் அவனுக்கு ஒரு லாபமுமில்லை. தப்பாகவே தெரிந்து கொள்வதாலுங்கூட ஒரு நஷ்டமுமில்லை.

யோக சாஸ்திர நாடிகள் ஸமாசாரம் ஒரு ஏணியில் ஜாக்ரதையாக ஏறிப்போகிற மாதிரி. அதில் பழு பழுவாகப் பார்த்து ஏறித் தன்முயற்சியில் போக வேண்டும். வேதாந்த நாடிகள் லிஃப்ட் மாதிரி. அதுவே தூக்கிக் கொண்டு போவது. அதில் இருப்பவன் ஒன்றும் பண்ண வேண்டாம். லிஃப்ட் எப்படி வேலை செய்கிறது என்றும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அதைப் பற்றி அவன் தப்பாக நினைத்துக் கொண்டிருந்தால் கூட அதற்காக அது எங்கே போகுமோ அங்கே கொண்டு சேர்க்காது என்றும் இல்லை.

ஆகையினால்தான் ஆசார்யாள் பாஷ்யம் எழுதின போது ஆரம்ப காலத்தில் மூர்த்த நாடி பற்றிப் பொது அபிப்ராயம் எப்படி இருந்ததோ அப்படியே தாமும்
'ஸுக்ஷும்னை' என்று சொல்லிக் கொண்டு போனார். ஒன்றும் விஸ்தாரம் பண்ணாமல் சுருக்கமாகச் சொல்லிக் கொண்டு போனார். அப்புறம் இந்த விஷயம் கொஞ்சம் டீப்பாகவே சாந்தோக்ய, ப்ருஹதாரண்யக உபநிஷத்களிலும், பிரம்ம ஸுத்ரத்திலும் வரும்போது, ஸுக்ஷும்னை' என்று பேர் சொல்லாமல், சிரஸுக்குப் போகிற நாடி என்று மட்டுமே சொல்லி நிறுத்திக் கொண்டார். அப்போதுகூட இது ஸுக்ஷும்னை இல்லை என்று ஸ்பஷ்டமாக சொல்ல வில்லை. அதோடு முந்தின உபநிஷத்துக்களில் தாம் ஸுக்ஷும்னை என்று சொல்லியிருந்ததையும் மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டார். அவசியமில்லாத வம்புக்கெல்லாம் 'இம்பார்டென்ஸ்' தராதவர்! நான் தான் இதை பெரிய ஆலாபனை பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

உத்தராயண-தக்ஷிணாயன விஷயமாக மட்டும் ஏன் பொது நம்பிக்கைக்கு மாறாக எது ஸரியோ அதை எடுத்துச் சொன்னாரென்றால் அதைத் தெரிந்து கொள்வதாலும் ஒருத்தனுக்கு ஆத்ம லாபமில்லைதான். ஆனாலும் தப்பாகத் தெரிந்து கொண்டதால், உத்தராயண காலத்தில் செத்துப் போகிற வெற்று ஆளைக் கூட உத்தம் ஜீவனாக நினைப்பதாகவும் - இப்படி நினைப்பதைக்கூட பரவாயில்லை என்று விட்டுவிடலாம்; ஆனால் அப்படி விடமுடியாமல் - தக்ஷிணாயனத்தில் தேஹ வியோகமாகிற மஹாத்மாக்களைக்கூட மறுபடி பிறக்கவேண்டிய ஸாதா ஆஸாமியாக நினைப்பதாகவும் ஆகியிருப்பதைப் பார்த்துத்தான் இது அபசாரமாச்சே! என்று ஸரியானதைச் சொன்னார்.

பீஷ்மர் ஏன் உத்தராயண மரணத்துக்காக காத்துக் கொண்டிருந்தார் என்று பாஷ்யத்தில் சொல்லும் இடத்தில் ஆசார்யாளுடைய உசந்த மனோபாவமும் தெரிகிறது. 'ஆசார பரிபாலனார்த்தம்', அதாவது லோக வழக்குகளை நடத்திக் காட்டும் பொருட்டே பீஷ்மர் அப்படிப் பண்ணினார் என்கிறார்!

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஒரிஜனலாக ஸுக்ஷும்னா என்ற பேரே வேதாந்தத்தில் சொல்லியுள்ள மூர்த்த நாடிக்குந்தான் இருந்திருக்கிறது!ஸுக்ஷும்னா என்பது ஸுர்யனுடைய கோடிக்கணக்கான ரச்மிகளில் (கிரணங்களில்) முக்யமாக எடுக்கப்பட்ட ஏழில் முதலாவதாகும். அப்பைய தீக்ஷிதர் ஸுர்யனைப் பற்றிச் செய்துள்ள ஸ்தோத்திரத்தில் அதைக் குறிப்பிட்டிருக்கிறார். ஸுர்ய ரச்மிகள்தான் வேதாந்தம் சொல்லும் ஹ்ருதயத்திலிருந்து புறப்படும் நாடிகளின் வழியாக ஒரு சரீரத்தின் எல்லா பாகங்களிலும் பரவி ரத்தம், பித்தம், கபம் முதலியவற்றுக்கு மூலமான ஸெமி-ஸ்தூல ஜூஸ்களை அவற்றுக்கள் உண்டாக்குகின்றன. சாந்தோக்யத்தில் இந்த விஷயம் இருக்கிறது. இந்த நாடிகளில் ஸுர்யனுடைய ஸுக்ஷும்னா ரச்மி பாய்கிற நாடிதான் ஹ்ருதயத்திலிருந்து சிரஸுக்குப் போவது. அதனால் ஒரிஜனலாக அதற்குத்தான் ஸுக்ஷும்னா நாடி என்ற பேரே இருந்தது. அதைத் தான் யோக சாஸ்திரக்காரர்கள் தங்களுடைய யோகத்தில் முக்யமாக இருக்கும் மையநாடிக்கு பேராக வைத்துக் கொண்டார்கள். மூலத்தில் அது ஸுர்ய ஸம்பந்தமுள்ளதாக இருந்தாலும் இவர்களோ தங்களுடைய சாஸ்திரத்தில் வரும் ஸுர்ய நாடிக்கு அந்தப் பேரைக் கொடுக்காமல், நடுநாயகமாக இருக்கிறது என்பதால் அக்னி நாடிக்கு அப்படிப் பேர் வைத்தார்கள்.....

விஷயத்தை விளக்கிச் சொல்கிற ப்ருஹதாரண்யக, சாந்தோக்ய, ப்ரஹ்மஸுத்ர பாஷ்யங்களில் மூர்த்த நாடி என்றே போட்ட ஆசார்யாள் முதலில் ஸுக்ஷும்னை என்று போட்ட மூன்று இடங்களில் அதை மாற்றாமலே விட்டு விட்டதற்கு ஒரு காரணம் சொல்லலாம்: பாக்கி அத்தனை இடங்களிலும் அப்படிப் போடாமல் அந்த மூன்று இடத்தில் மட்டும் ஸுக்ஷும்னை என்று போட்டதால் வேதாந்தம் சொல்லும் ஹ்ருதய நாடிக்குத்தான் அப்படி மூலத்தில் பெயரிருந்தது என்று எல்லாரும் புரிந்து கொள்ளட்டும் என்றே அப்படி விட்டிருக்கலாம். ஆனால் நேர்மாறாக அந்த மூன்று இடத்தில் சொல்லியிருப்பதை வைத்து பாக்கி அத்தனை இடங்களிலுமே யோக சாஸ்திரத்தின் மூலாதார ஸுக்ஷும்னைதான் சொல்லப் பட்டிருப்பதாக பிற்காலத்தில் அபிப்ராயம் ஏற்பட்டு விட்டது.

No comments:

Post a Comment