Contact Us

Name

Email *

Message *

Friday 27 June 2014

மரக்கறியில் ஹிம்ஸை இல்லையா ?

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

ப்படிச் சொன்னால் உடனே திருப்பிக் கொள்கிறார்கள். "மிருகம் பக்ஷி மட்டும்தானா? மரம், செடி, கொடி, பயிர் இவையும் ஈசன் குழந்தைகள்தான். அவற்றுக்கும்தான் உயிரும், உணர்ச்சிகளும் இருக்கின்றன. ஜகதீஷ்சந்திர போஸ் முதலியவர்கள் சொல்லியிருக்கிறார்களே! அதனால் சாக உணவு என்பதும் ஜீவஹத்திதான்" என்கிறார்கள்.

இதற்கு நான் ஸமாதானம் சொல்லியாக வேண்டும். ஜே.ஸி.போஸுக்கு எத்தனையோ யுகம் முந்தியே வேதாதி சாஸ்திரங்கள் பயிர், பச்சை, மரம், மட்டை எல்லாம் உயிருள்ளவை என்று சொல்லித்தான் வந்திருக்கின்றன. ஆனாலும் ஈஸ்வர நியதியில் நல்லது போலவே கெட்டது, ஸெளக்யம் போலவே கஷ்டம் எல்லாமும் சேர்ந்து சேர்ந்துதான் இருக்கிறது. 'இன்ஸ்டிங்க்டிவ்' ஆகவும் (உள்ளுணர்ச்சிப் பிரகாரமும்), தேஹத்தின் இயற்கையான தன்மையைப் பொருத்தும் சிங்கம், புலி முதலான பிராணிகள் ஜீவஹிம்ஸை பண்ணித்தான் ஜீவிக்க வேண்டும் என்று ஈஸ்வர நியதியே இருக்கிறது. மநுஷ்யன் விஷயத்தில் மாத்திரம் இவன் எதையும் ஆலோசித்துத் தெளிந்து முடிவு எடுக்கும்படியாக அறிவு விசேஷத்தை (ஈசன்) கொடுத்திருக்கிறான். அதனால், இந்த பிரபஞ்ச நாடகத்தில் இவன் முழுக்கவும் நல்லதுதான் வேண்டும், ஸெளக்யம்தான் வேண்டும் என்று பண்ணிக்கொள்ள முடியாமல் 'நேச்சர்' என்ற பெயரில் ஈஸ்வரன் கட்டிப் போட்டாலும், இப்படிக் கட்டிப்போட்ட கயிறு நீளுகிற எல்லைக்குள்ளாவது இவன் கூடியமட்டும் கெட்டதைத் தள்ளி நல்லதையும், கூடியமட்டும் கஷ்டத்தைத் தள்ளி ஸெளக்யத்தையும் தேடி அடைய வேண்டியவனாக இருக்கிறான். எதையோ தின்று தானாக வேண்டும். இல்லாவிட்டால் சாக வேண்டியதுதான் என்ற necessity இவனுக்கு இருக்கிறது - இயற்கை அப்படிக் கட்டி வைத்துருக்கிறது. எங்கேயோ லக்ஷத்தில் ஒருத்தனாக லோக வாழ்க்கையைப் பொருட்படுத்தாமலே உதறி விட்டுப் போகிறவனைத் தவிர மற்ற எல்லாரும் இந்த யதார்த்தத்தை அநுஸரித்துத்தான் போகணுமே தவிர, 'சாலஞ்ஜ்' பண்ணி முடியாது. 'ஸரி, எதையோ தின்னத்தான் வேண்டுமென்றால், கூடியவரை கெடுதலை, கஷ்டத்தை உண்டாக்காமல் அமைத்துக்கொள்ளக்கூடிய ஆஹார முறை என்ன?'என்று பார்ப்பதே இவன் செய்ய வேண்டியது. இருப்பதில் குறைச்சலான ஹிம்ஸை தருவது பயிர் பச்சைகளையும் காய்கறிகளையும் சாப்பிடுவதுதான்.

பயிர்கள் நன்றாக முற்றிச் சாய்ந்த பிற்பாடுதான், அதாவது தாமே ஜீவனத்தை முடித்துக்கொண்ட பின்தான், தானியம் அடித்து எடுத்துக் கொள்கிறோம். காய்கறிகளைப் பறிப்பதால் செடியையே நாம் கொன்றுவிடவில்லை. கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றை நாம் ஒரு கொடி செடியிலிருந்து எடுப்பதால் அந்தச் செடிக்கு நம் நகத்தைக் கிள்ளினால், அல்லது ரோமத்தைப் பிடுங்கினால் வலிக்கிற அளவுக்குத்தான் வலி உண்டாகும். அதோடுகூட மநுஷ்யனுக்கும் மிருகங்களுக்கும் pain (வலியுணர்ச்சி) என்று உண்டாவதைவிட, தாவர வர்க்கத்துக்கு 'ஸென்ஸிடிவிடி' (உணர்ச்சி நுட்பம்) குறைச்சலானதால் pain -ம் குறைச்சல் தான் என்றோ 'ரிஸர்ச்'பண்ணிச் சொல்கிறார்கள். அப்படியே ஸமூலம் கீரை மாதிரியானவற்றையும், கிழங்கு ஹதமே பண்ணிச் சாப்பிடும்போது கூட, நாம் அவற்றைப் பிடுங்காவிட்டாலும் எப்படியும் அவையே அதற்குப் பிறகுச் சில நாளில் வாடிவிடப் போகிறவைதான். ஆகவே இந்த அம்சங்களையும் நம் necessity -ஐயும் கருத்தில் கொண்டு பார்த்தால் சாக போஜனம்தான் comparative -ஆக மினிமம் ஹிம்ஸை உள்ளது என்று தெரிகிறது. அதனால் இதையே மநுஷ்யர்களாகப் பிறந்த நாம் ஏற்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

ஸந்நியாசிகளுக்குப் பூர்ண அஹிம்ஸை விதிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் நிமித்தமாகக் கறிகாயைப் பறித்து எடுக்கிற சின்ன வலிகூட தாவரங்களுக்கு உண்டாகக் கூடாது என்றும், அவர்கள் தாங்களாகவேதான் சாப்பிட வேண்டும் என்றும் விதித்திருக்கிறது. 'ஜீர்ண பர்ணாசிந: க்வசித்' என்பது இதைத்தான். 'ஜீர்ணபர்ணம்' என்றால் சருகு. 'ஆசிந:' என்றால் ஆஹாரம் செய்கிறவர்கள். தானியங்கள் கூட முளைக்கிறதோ இல்லையோ? அதனால் அவற்றுக்குக் கரு இருப்பதாக அர்த்தம். அதை ஒரு ஸந்நியாஸி சாப்பிட்டால் கர்ப்பச் சேதந்தான், ஜீவஹத்திதான் என்று அதையும் தள்ளச் சொல்லி இங்கே 'ஐடியலை' ரொம்பவும் கடுமையாக வைத்திருக்கிறது. ஸந்நியாஸி ஒரு சாத்துக்குடியோ, கொய்யாப்பழமோ, விளாம்பழமோ சாப்பிடும்போதுகூட ஸர்வ ஜாக்கிரதையாக ஒரு விதையைக்கூடத் தின்றுவிடாமல் நீக்கிவிட்டுத் தான் சாப்பிடணும். இப்படி மஹரிஷிகள் சுத்தமான பழ ஆஹாரம் சாப்பிட்டதுதான் நிஜமான 'பலஹாரம்'. 'பலம்' என்றால் 'பழம்'. இப்போது அன்னத்தை மட்டும் நீக்கி, தோசை, இட்லி, ஸேவையில் பல தினுஸு, 'தொட்டுக் கொள்ள' சட்டினி, ஸாம்பார், கொத்ஸு, மிளகாய்ப் பொடி என்று பல விதங்கள் என்பதாகச் சாப்பிடுவதைப் 'பலஹாரம்' என்று ஆக்கி கொண்டு அவஸ்தைப் படுகிறோம்! நிஜமான பலஹாரம் பண்ணினால் ஸத்வமும் சாந்தமும் உண்டாகும். காமம் (sex என்கிறார்களே அது) ரொம்பவும் கட்டுப்பட்டுவிடும். குடும்பக் கட்டுப்பாடு என்று தனியாக ஒன்று பண்ணவேண்டிய அவசியமே இராது.

'தாவரத்தை மட்டும் ஹிம்ஸிக்கலாமா?' என்பதற்கு இன்னொரு ஜஸ்டிஃபிகேஷன் இதில்தானிருக்கிறது. ஒரு பிராணியைக் கொலை பண்ணிவிடுவதுபோல ஆஹாரத்துக்காகத் தாவர வர்க்கத்தை நாம் அநேகமாகக் கொலை பண்ணுவதில்லை என்றும் அப்படியே அவற்றை ஹிம்ஸிக்க நேர்ந்தாலும், அப்போது கூட பிராணிகளுக்கு உள்ள அளவுக்கு வலியுணர்ச்சி அவற்றுக்கு ஏற்படுவதில்லை என்றும் சொன்ன ஸமாதானம் நாம் அவற்றை எப்படி affect பண்ணுகிறோம் (பார்க்கிறோம்)?' என்பது வைத்துச் சொன்னது. இப்போது மாம்ஸ போஜனமும் சாக போஜனமும் நம்மை எப்படி affect பண்ணுகின்றன என்பதை வைத்தும் ஸமாதானம் சொல்கிறேன். நமக்குச் சித்தசுத்தியும், ஸத்வ குணமும் உண்டாவதற்கு மாம்ஸ போஜனம் உதவுவதில்லை. சரீரம் வேண்டுமானால் ஸ்ட்ராங்காக ஆகலாமே ஒழிய, தியானாதி அப்யாஸங்களுக்கு நான்-வெஜிடேரியன் ஆஹாரம் அநுகூலம் செய்வதில்லை; அதோடு 'கம்பேர்' பண்ணினால் சாக போஜனம்தான் ஆத்மாபிவிருத்திக்கு அநுகூலமாயிருப்பது. சாக போஜனத்திலும் ஆத்மாபிவிருத்தியை முன்னிட்டு தள்ளவேண்டிய பல பதார்த்தங்கள் இருந்தபோதிலும் மாம்ஸத்தைவிட இதுதான் மேலானதாக இருக்கிறது.

மனஸுக்கு ஸம்மதமாயிருக்கிறதா என்றுதான் யோசித்துப் பார்க்கலாமே! ஒரு ஆட்டையோ மாட்டையோ அது கதறக் கதற வெட்டுகிற மாதிரிதான் கீரையைப் பிடுங்கி நறுக்குவது நம் மனஸுக்குத் தோன்றுகிறதா? இந்த 'ஸைகாலஜிகல் ஃபாக்ட'ருக்கு ஒரு முக்கியத்வம் உண்டு. மாம்ஸத்திலேயே ஒரு பிராணியின் ஊனைத் தின்னலாம், இன்னொரு பிராணியின் ஊனைத் தின்றால் நிஷித்தம் என்று வைப்பதற்கு (ஸைகாலஜிகல் தவிர) வேறே காரணம் இல்லை. 'அய்யய்யே! பன்றி மாம்ஸமா?' என்று ஹிந்துக்களில் மாம்ஸ போஜனிகள் முகத்தைச் சுளிப்பார்கள். ஆனால் அந்நிய தேசங்களில் அதையும் தின்னுகிறார்கள். இப்படியே 'நண்டையும், நத்தையும் கூடச் சீனாக்காரன் தின்னுகிறானே!என்று நம்மூர் நான்வெஜிடேரியன்களே அருவருப்புடன் சொல்கிறார்கள். அப்புறம், மாம்ஸம் தின்பதிலேயே 'gradation' வேறு. 'ஸைபருக்கு (முட்டை) சொல்கிறது  தான் சாப்பிடுவோம், மத்ஸ்யம் மட்டும்தான் சாப்பிடுவோம், மற்றபடி அசைவ வஸ்து எங்களிடம் வரக்கூடாது' என்பவர்கள் உண்டு.

எதெதையோ பிடித்துத் தின்றாலும் எதனாலோ குதிரை மாம்ஸம் தின்றால் மட்டமம் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

'வார்' (உலக யுத்தம்) நடந்தபோது எல்லாவற்றுக்கும் 'ஸ்கார்ஸிடி' உண்டான ஸமயத்தில் ஜெர்மனி தேசத்துக்காரர்கள் குதிரை மாம்ஸம் சாப்பிட ஆரம்பித்தார்கள். இதற்காக அவர்களை மாம்ஸ போஜனிகளேயான மற்ற எல்லா மேல்நாட்டுக்காரர்களும் மட்டம் தட்டிப் பரிஹாஸம் செய்தார்கள்.

இதே ரீதியில் சைவ உணவுக்காரர்கள் பொதுவாக அத்தனை அசைவ உணவுக்காரர்களையும் கேள்வி கேட்டு மடக்கலாம் என்று தோன்றுகிறது. நம் ஊர்க்காரர்களான அசைவர்கள் 'பருப்புத் தின்னி பார்ப்பான்' என்று ஸ்வாதீனமாகக் கேலி செய்கிறபோது, சைவமாகச் சாப்பிடுபவர்கள். என்னதான் பருப்பும், கிருப்பும் சாப்பிட்டாலும் ஏதோ பார்த்தால் வேண்டுமானால் 'கஷ்க் முஷ்க்' என்று தொந்தியும் தொப்பையுமாக ஆக முடியுமே தவிர, இது ஊளைச் சதைதானேயொழிய நல்ல கட்டுமஸ்தாக தேஹ பலம் பெற்றதாகாது என்ற அர்த்தத்தில் சொல்கிறார்கள். வெளி தேசத்துக்காரர்களோ இப்படி ஸ்வாதீனத்தின் மேல் இல்லாமல் இளக்காரமாகவே நம்மில் அங்கே போகிறவர்களிடம், "நீங்கள் என்ன காய்கறிகளையே தின்று கொண்டிருக்கிறீர்களே! உங்கள் தேசத்தில் எவ்வளவு மாம்ஸம் கிடைக்கும்? அத்தனையும் 'வேஸ்ட்' பண்ணிவிட்டு, நீங்களும் நோஞ்சான் பட்டாளங்களாக ஆகியிருக்கிறீர்களே!' என்று மட்டந்தட்டிக் கேட்கிறார்கள். மற்றவர்களைவிட ஹிந்துக்களிலேயே அதிகம் வெஜிடேரியன்கள் இருப்பதால் தான் இவர்கள் வலுவிழந்து துருக்கர்கள், வெள்ளைக்காரர்கள் ஆகியவர்களிடம் தேசத்தைப் பறிகொடுத்தார்கள் என்று சொல்பவர்கள்கூட உண்டு. இந்த விஷயத்துக்கு அப்புறம் வருகிறேன். இப்போது மாம்ஸம் சாப்பிடாததற்காக நம்மைப் பரிஹாஸம் செய்கிற நான்வெஜிடேரியன்களிடம் நாம் எப்படித் திருப்பிக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொடுக்கிறேன். "மாம்ஸம் சாப்பிடுகிற நீங்களே சில மாம்ஸ தினுஸுகளைச் சாப்பிடுகிறவர்களைப் பரிஹாஸமும் செய்கிறீர்கள் அதுமட்டுமில்லை. மாம்ஸத்திலேயே உசத்தி, தாழ்த்தி ஆகிய இத்தனை வகைகளைச் சாப்பிடுகிறவர்களும் ஒரு முகமாகச் சேர்ந்துகொண்டு, இப்போதும் இந்த உலகத்தில் எங்கேயோ வனாந்தரங்களில் இருக்கிற ஆதிவாஸிகளில் சிலபேர் நரமாம்ஸம் தின்னுகிறார்களே, அவர்களை ரொம்ப ரொம்ப மட்டமாக நினைத்து 'நரமாம்ஸ பக்ஷிணி (Cannibal) என்று தூற்றுகிறீர்கள். நரமாம்ஸத்தை விட்டு மற்ற மாம்ஸங்களைச் சாப்பிடுகிற நீங்கள் அந்த 'கானிபாலை' விட ரொமபவும் உயர்ந்தவர்கள் என்று பெருமை கொண்டாடிக் கொண்டால், எந்தப் பிராணியின் மாம்ஸத்தையுமே சாப்பிடாத நாங்கள் உங்களையும்விட உசந்தவர்கள்தானே? நீங்கள் எப்படி ஒரு பக்கம் நரமாம்ஸ போஜனத்தையும் கேலி பண்ணிக்கொண்டு இன்னொரு பக்கம் எங்களுடைய சாக போஜனத்தையும் மட்டந் தட்டுவது பொருத்தம்?" என்று அவர்களைக் கேட்க வேண்டும். "இந்தியர்கள் எல்லாரும் மட்டும் மாம்ஸம் சாப்பிட ஆரம்பித்தால், அங்கே உணவுப் பிரச்னையே வராது என்கிறீர்கள்; உங்கள் தேசங்களிலுந்தானே 'ஸ்கார்ஸிடி' சில ஸமயங்களில் வருகிறது? அதனால் உங்களுக்குத்தான் எதையும் கெட்டுப் போகாமல் பாடம் பண்ணி வைக்க முடிகிறதே செத்த மனிதர்களையும், உபயோகமில்லாத கிழங்களையும் ஸரிப்படுத்திப் பக்குவம் பண்ணி .....?" என்று சொன்னாலென்ன என்றுகூடத் தோன்றுகிறது (சிரிக்கிறார்) .

இன்னொன்று பழம் அழுகுகிறது; காய்கறிகள் கெட்டுப்போகின்றன என்றால் இவை துர்நாற்றமடிக்கத் தான் செய்யும். கழுநீரைக் கொட்டினால் அதுவும் துர்கந்தம் அடிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இந்த நாற்றமெல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற மாதிரி அல்லவா அந்நிய பதார்த்தங்களைச் சமைக்கிறபோது வயிற்றைப் புரட்டி எடுக்கிறது? அதுகள் அழுகி கிழுகிக் கெட்டுப் போனாலோ குடலையே பிடுங்கியெடுக்கிற மாதிரி காத தூரத்துக்குத் துர்வாடை! (இங்கே இன்னொன்றும் சொல்லணும். முட்டைகோஸ், பீட்ரூட் மாதிரியான இங்கிலீஷ் வெஜிடபிள்கள் கூடாது என்பதற்கும் இதிலேயே காரணம் தெரிகிறது. அந்தக் காய்கறிகளை வேக வைக்கிறபோதும், அந்தக் கழிவு நீரைக் கொட்டிய இடத்திலும் அந்நிய பதார்த்தம் போலவே வாடை வருவதைப் பார்க்கலாம்.)

No comments:

Post a Comment