Contact Us

Name

Email *

Message *

Thursday 17 July 2014

முள் படுக்கை

தேனம்பாக்கம் சிவஸ்தானத்தில் ஒருநாள் காலை ஒரே பதைபதைப்பு, பரபரப்பு! பெரியவா படுத்துக் கொள்ளும் இடத்துக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த பாரிஷதர்கள், உறக்கம் கலைந்து பார்க்கும்போது பெரியவாளை காணோம்! சுற்றுப்புறம் எல்லாம் சல்லடை போட்டும் பெரியவாளை கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவாக, அங்கு ஓடிய சிற்றாரின் கரையில், சற்று தள்ளி, ஏதோ காவி வஸ்த்ரம் தரையில் கிடந்த மாதிரி இருக்கவே, அருகே சென்று பார்க்கலாம் என்றால், காலை வைக்கவே முடியாத அளவு எக்கச்சக்க முட்கள்! என்ன கொடூரம்!.........

முட்புதர்கள் மண்டி கிடக்கும் ஓரிடத்தில் பெரியவா சுருண்டு கிடக்கிறார்!  "அவராக இந்த முள்ளுப்படுக்கையை உவந்தாரா....அல்லது.....?" எண்ணாததெல்லாம் எண்ணியது அடியார் குழாம்.  அவர்கள் அருகே நெருங்க, பளிச்சென எழுந்து உட்கார்ந்தார். திருமேனியில் அப்பினார்ப்போல் முள் அங்கி பூண்டிருந்த கோலம், அனைவர் மனதிலும் தைத்தது.

வயது முதிர்ந்த பக்தரொருவர், "ஐயோ, பெரியவா! இதென்ன ஸோதனை?" என்று அலறுகிறார்.

பெரியவா, "இந்த நாள்ல ஜன ஸமூஹத்தை வஸீகரிச்சு பிடிசுண்டிருக்கிறதா, கை நெறைய ஸம்பாதிக்கறதுக்கு தினுஸ்தினுஸா படிப்புகள் இருக்கு. அப்படி இருக்கறச்ச, என் வார்த்தையை மதிச்சு, [நெகிழ்ந்த குரலில்] என்னை நம்பிண்டு செல தாயார், தோப்பனார்கள் தங்கள் கொழந்தேளை வருமானம், ஹானர், ஃபாஷன் எதையும் கவனிக்காம வேத பாடசாலைகளுக்கு அனுப்பிண்டிருக்கா, அந்த கொழந்தேளும், ஊர் ஒலகத்துல ஒடனொத்த கொழந்தேள்ளாம் தினம் ஒரு டிரஸ், வேளைக்கு ஒரு ஹோட்டல்....ன்னு இருக்கறப்போ, ஒரு மூணரை மொழ ஸோமனை [வேஷ்டி] சுத்திக்கிண்டு, போடற உண்டக் கட்டியை தின்னுண்டு, வெளில தலையக் காட்டினாலே "சிண்டு டோய்!"ன்னு பரிஹாஸத்தை வாங்கி கட்டிண்டு, தொண்டை தண்ணி வத்த சந்தை சொல்லிண்டிருக்குகள்.."..[மேலே எதுவும் பேசும் முன் உள்ளிருந்த வேதனையை மௌனித்தார்]

ஏதோ ஓரிடத்தில் மடத்தின் ஆதரவில் நடக்கும் பாடசாலையை குறிப்பிட்டு சொன்னார்........." அங்க கொழந்தேள் என்னமோ விஷமம் பண்ணிடுத்துகள்.....ங்கறதுக்காக அங்க இருக்கற சமையல்கார அம்மா புது தொடைப்பத்தால கொழந்தேள அடிச்சுட்டாளாம்.......... வேதம் படிக்கிற அந்த கொழந்தேளுக்கு எப்படி வலிச்சிருக்கும்னு கொஞ்சம் தெரிஞ்சிக்கறதுக்காகத்தான்........."

சுற்றியிருந்தோர் ஆடி போய் விட்டனர். எப்பேர்ப்பட்ட பிடிப்பு வேதம் படிக்கும் குழந்தைகளிடம்! அவர் அருகில் நடக்கமுடியாதபடி பயங்கர முட்கள். எப்படி நடந்து போனார், படுத்துகொண்டிருந்தார்! அந்த சமையல் அம்மா ஸார்பில் மன்னிப்பு கேட்டனர்.

பெரியவா, "நீங்கள்ளாம் எங்கிட்ட மன்னிப்பு கேக்கறதுனால என்ன ஆகப்போறது? அந்த அம்மா, அந்த கொழந்தேளுக்கு ஸாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணி மன்னிப்பு கேட்கணும்"

உடனேயே அந்த மடத்துக்கு ஃபோன் பண்ணினால், பெரியவா வேதனைப்பட்ட ஸம்பவம், முந்தின நாள்தான் நடந்திருக்கிறது என்று தெரியவந்தது. பெரியவா போட்ட உத்தரவை சொல்லி, அந்த சமையல்கார அம்மாவை, அங்கிருந்த அத்தனை குழந்தைகளுக்கும் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணச் செய்தனர்.

வேதம் படிக்கும் குழந்தைகளுக்கும், வேதம் படித்தவர்களுக்கும் நாம் பண்ணும் கைங்கர்யமும், அபவாதமும் பெரியவாளுக்கே செய்வதுதான்! என்பதை நாம் உணர வேண்டும்.



நன்றி: ஸ்ரீமதி பத்மா நாகராஜன்

No comments:

Post a Comment