Contact Us

Name

Email *

Message *

Sunday 3 August 2014

காயத்ரீ உபாஸனை

நான் சில பையன்களுக்கு வேதத்தைச் சொல்லித் தர ஏற்பாடு பண்ணினேன். பையன்கள் எல்லோரும் ரொம்ப லக்ஷணமாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பரீக்ஷையும் பண்ண வைத்தோம். அந்தப் பரீக்ஷையில் பையன்கள் நன்றாக பாஸ் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு சந்நிதானம் கையால் சர்டிபிகேட் கொடுக்கவேண்டும் என்று சொன்னார். அப்பொழுது நான் சொன்னேன், “அதெல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்; அந்தப் பையன்கள் ஒழுங்காக சந்தியாவந்தனம் செய்கிறார்களா? ஒழுங்கா பரிசேஷண மந்திரம் தெரியுமா? அவர்களுக்கு ஒழுங்கா அபிவாதயே தெரியுமா?” அப்படின்னு கேட்டேன். “சந்நிதானம் இப்படி கேட்டால் நாங்களே பெயிலாகி விடுவோம்” என்றார் அவர். “இந்த விஷயத்திலேயே நீங்கள் கவனம் செலுத்தாமல், அவர்களுக்கு வேதம் சொல்லித் தருகிறோம் என்றால் அதில் அர்த்தமில்லை. இது வந்து, அடிப்படையான விஷயம். அடிப்படையான விஷயத்திலேயே கவனம் செலுத்தாவிட்டால், மேற்படி விஷயத்திற்குப் போய் கவனம் செலுத்துவதில் அர்த்தமில்லை. அதனால், பையன்கள் முதலில் ஒழுங்காக சந்தியாவந்தனம் பண்ணும்படி செய்யுங்கோ. அது அத்யாவசியமானது” என்று சொன்னேன். அதே போல், ‘இந்தப் பையன்களுக்கு எல்லாம் பூணூல் போட்டாகிவிட்டது ; அதனால் எல்லாம் சரியாப் போச்சு’ என்று யாரும் நினைத்துக் கொள்ளக் கூடாது.

இன்றிலிருந்து, இந்தப் பையன்களுக்கு முதலில் சாப்பிடும்பொழுது எந்த மாதிரி சாப்பிட வேண்டும்? அதாவது பரிசேஷணம் பண்ணி சாப்பிடுவதென்றால் எப்படி? என்பதைச் சொல்லித் தரவேண்டும். அதேபோல் தினமும் ஒவ்வொரு வேளையும் தவறாமல் சந்தியாவந்தனம் பண்ண வைக்க வேண்டும். அனேகம் பேருக்கு பூணூல் போட்ட அன்று கூட சந்தியாவந்தனம் சொல்லித் தருவது கிடையாது. மீதி விஷயத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அந்த மாதிரி இருந்தால் அந்தப் பூணூலைப் போட்டு என்ன பிரயோஜனம்? ‘காயத்ரீ உபாஸனை’ பிராம்மணனுக்கு ஒரு பெரும் சொத்து. நான் அனேகம் பேருக்கு சொன்னேன், ‘நமக்கு இருக்கிற சொத்து என்பது காயத்ரீ உபாஸனைதான்’. எங்கப்பா ரூபாய் வைத்துவிட்டுப் போயிருக்கிறார், நிலம் வைத்துவிட்டுப் போயிருக்கார் என்றால், அந்த ரூபாயும் நிலமும் ரொம்ப நாள் நிற்காது. ஆனால் உங்கப்பா உனக்கு உபதேசம் பண்ணின காயத்ரீ மந்திரத்தை நீ ஒழுங்காக ஜபம் பண்ணிக்கொண்டு வந்தால், அதுதான் உனக்குப் பெரும் சொத்து என்று நினைத்துக்கொள். அநேகம் பேர் என்னிடம் வந்து, ‘சந்நிதானம் எனக்கு மந்திர உபதேசம் கொடுக்கணும்’ என்று கேட்பார்கள். நீ முதலில் காயத்ரீயை ஒழுங்கா பண்ணிக் கொண்டு இருக்கிறாயா’? அப்படி என்று கேட்டால், “ஆபீஸிற்கு சீக்கிரம் போக வேண்டியிருக்கிறது. அதற்கு ‘டைம்’ கிடைக்க மாட்டேன் என்கிறது. சந்நிதானம் ஓர் உபதேசம் கொடுத்தால்...” என்பார்கள். “என்ன ஓய்! காயத்ரீக்கே டைம் கிடைக்க மாட்டேன் என்கிறது, ‘சந்நிதானம் ஓர் உபதேசம் கொடுத்தால்... என்கிறீர்களே!” இது சரியில்லை. “நீங்கள் ‘காயத்ரீயை சரியாக ஜபம் செய்கிறேன்’ என்று என்னிடம் வார்த்தை கொடுங்கோ. நான் உங்களுக்கு மந்திர உபதேசம் செய்கிறேன். உங்களுக்கு காயத்ரீயிலே ச்ரத்தை இல்லை என்று சொன்னால், மீதி மந்திரத்தை வாங்கி என்ன பண்ணப் போறேள்? 

‘ந காயத்ர்யா: பரோ மந்த்ரோ ந மாத்ரு தைவதம் பரம்’

காயத்ரீயை மீறின இன்னொரு மந்திரம் இல்லை. அம்மாவுக்கு மீறி, இன்னொரு கடவுள் இல்லை என்பது சாஸ்திரம். இந்த இரண்டையும் நாம் ஏற்றுக் கொள்வதே இல்லை. காயத்ரீ உபாசனை விஷயத்திலே ரொம்ப உபேக்ஷை. அம்மாவைப் பற்றியும் ரொம்ப உபேக்ஷை. இது சரியில்லை. அதனால், இன்றைக்கு உபநயனம் ஆன இந்தப் பையன்கள் எல்லோருக்கும், கால காலத்துக்கு சந்தியாவந்தனத்தை செய்ய வைக்க வேண்டிய பொறுப்பு, அந்தப் பெற்றோர்களுடையது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அநேகம் அப்பாக்கள் சொல்வார்கள், “எனக்கே சந்தியாவந்தனம் செய்ய வராது, நான் எப்படி பையனுக்குச் சொல்லித் தரட்டும்?” அப்படி என்று. அப்பொழுது, வாத்யாரை வைத்துக்கொண்டு, நீங்களும் உங்க பையனும் இரண்டு பேரும் சொல்லிக் கொள்ளுங்கள். ஆமாம். சிலபேருக்கு ரொம்ப சங்கோஜம். “எனக்கு இவ்வளவு வயது வந்ததற்கப்புறம் நான் சொல்லிக் கொள்வது என்றால், என்ன அர்த்தம்?” அப்படி என்று. ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இந்த வயது என்பது ஒன்றும் குறுக்கே வரக்கூடாது. இது வரை நான் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்று சொன்னால், இனிமேலாவது ஒழுங்காக நடக்க வேண்டும் என்கிற நினைவு வரவேண்டும் என்பது ஒரு தப்பா? வயதானவன், ஒழுங்காக நடந்து கொள்ளக்கூடாது என்பது, எங்கேயாவது உண்டா? அதனால், உங்களுக்கு சந்தியாவந்தனம் தெரியாது என்றால், உங்கள் மகனுடைய நன்மைக்காவது நீங்கள் சந்தியாவந்தனம் செய்தால், பிறகு அவன்  சந்தியாவந்தனம் செய்வான். நீங்கள் சந்தியாவந்தனத்தை விட்டுவிட்டால், உங்கள் பையனும் முதலிலேயே விட்டு விடுவான். அவனைக் கேட்டால் என்ன சொல்லுவான்? “எங்கப்பா ஒன்றும் செய்வதில்லை ; நான் எதற்கு செய்ய வேண்டும்? ”அப்படி என்றுதான் அவன் கேட்பான்.

பகவான் பகவத் கீதையில் சொல்வார், ‘நான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை; ஆனால் நான் பேசாமல் இருந்தேன் என்றால், எல்லாரும் கெட்டுப் போய் விடுவார்கள். அதனால் நான் சரியாய் இருக்கிறேன்’ என்றார் பகவான். அப்படி பகவானே சொல்லியிருக்கும் பொழுது, நாம், நம் பையன்களை ஒழுங்கான ரீதியில் வைக்கவேண்டும் என்பதற்காகவாவது நாம் சரியான ரீதியில் இருக்கவேண்டும் என்ற நினைவு நமக்கு வரவேண்டாமா? அதனால், இந்த விஷயத்திலே, யாரும் எந்த விதமான ஒரு சோம்பலுக்கும் அவகாசம் கொடுக்காதீர்கள். நாம் இப்படி பச்சையாகச் சொல்வதற்காக யாரும் தப்பாக் நினைத்துக் கொள்ளக் கூடாது. ஏன் என்றால் இந்த விஷயத்தை வேறு யாரும் சொல்வதற்கு இல்லை. வேறு எந்த உபன்யாசங்களை நான் கேட்கப் போனாலும் எனக்கு இந்த மாதிரி விஷயங்கள் கிடைப்பதில்லை; அதனால் இந்த விஷயத்தில் எல்லோரும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இது நம்முடைய பரம்பரையாக வந்திருக்கக்கூடிய நம் தர்மம். நமக்கு பரம்பரையாக வந்திருக்கக்கூடிய தர்மத்தை எந்த பரிஸ்திதி (சூழ்நிலை)யிலும் நாம் விட்டு விடக் கூடாது. நாம் எல்லோரும் நம்முடைய முன்னோர்களைப் பற்றி ரொம்பவும் பெருமையாகச் சொல்லிக் கொள்ளுவோம். அவர் சோமயாஜீ; அவர் மகாபண்டிதர்; அவர் ஆஹிதாக்னி என்று சொல்லுவோம். அப்பேர்ப்பட்ட சோமயாஜிக்கும், மகாபண்டிதருக்கும், ஆஹிதாக்னிக்கும் பேரன்களாகவோ, கொள்ளுப் பேரன்களாகவோ பிறந்துவிட்டு, இந்த ஒரு சந்தியாவந்தனம் கூட பண்ணுவதில்லை என்று சொன்னால், பாவம் அவர்கள். சொர்க்கத்தில் இருப்பவர்கள், மிகவும் பரிதாபத்தோடு இருப்பார்கள். நம்முடைய வம்சத்திலே பிறந்து, இப்படி ஒரு வ்ராத்யனாக இருக்கிறானே, நம்முடைய பேரன், நம்முடைய கொள்ளுப்பேரன் என்று சொல்லி, அவர்கள் அப்படி பரிதாபம் படக்கூடாது என்பதற்காகவாவது நாம் நம்முடைய தர்மத்தைச் செய்ய வேண்டும். நம்முடைய கடமையை நாம் அனுஷ்டிக்க வேண்டும். சிருங்கேரி மடத்தில் இந்த தர்மோபநயனங்களை நடத்துவது என்பது வெகு காலமாக வந்திருக்கிற சம்பிரதாயம். இந்த சம்பிரதாயத்தை இங்கே அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக இந்த தர்மோபநயனங்களை ஏற்பாடு செய்தோம்.

இன்னொரு விஷயம், பையன்களுக்கு சாதாரணமாக சிறிய வயதிலேயே எச்சில் என்பது தெரியவேண்டும். விரல் கடித்துக்கொண்டே இருப்பார்கள். நகங்களை பல்லினால் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் உபநயனத்திற்குப் பிறகு இது ‘உச்சிஷ்டம்’; உச்சிஷ்டம் என்றால் எச்சில் என்பது தெரிந்திருக்க வேண்டும். கைவிரல் தப்பித் தவறியாவது வாயில் போய்விட்டது என்றால், அதை அலம்பிக்கொண்டால் தான் அது சுத்தியாய் இருக்கும். ஆனால் இந்த விஷயத்தை அப்பாக்களே அப்படி செய்து கொண்டிருந்தால் இந்தப் பையன்கள் என்ன செய்வார்கள்? அநேகம் பேர் பல்லில் ஏதோ அழுக்கு இருக்கிறது என்பதற்காக ‘டக்கென்று’ அதை எடுத்துவிடுவார்கள், வாயில் விரல் போட்டு. ஆனால் அதை அலம்பிக் கொள்ள வேண்டும் என்ற நினைவு ஒருத்தருக்கும் இருக்காது. ஆனால் அது உச்சிஷ்டம், எச்சில் என்கிற அசூயை இருக்க வேண்டும்.

நான் பையன்கள் எல்லோருக்கும் ஒன்று சொல்வது, உங்களுக்கெல்லாம் உபநயனம் ஆகிவிட்டது என்று சொன்னால், இது ஒரு புது ஜன்மம். பிராம்மணனுக்கு இரண்டு ஜன்மங்களாம். முதலில் அம்மா வயிற்றிலிருந்து வருவது ஒரு ஜன்மம். உபநயனம் என்பது இரண்டாவது ஜன்மம். அந்த ஜன்மத்திலே அம்மா, அப்பா, யார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த ஜன்மத்திலே அம்மா, அப்பா யார்? என்று கேட்டால், காயத்ரீ தான் அம்மா. காயத்ரீ மந்திரத்தை உபதேசம் செய்பவர்தான் அப்பா. அப்படி ஒரு இரண்டாவது ஜன்மம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இதிலே நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அதிக ச்ரத்தையோடு இருக்க வேண்டும். மிகுதியான விச்வாஸத்தோடு இருக்க வேண்டும். எல்லோரும் இதை நன்றாகப் புரிந்துகொண்டு, யாரும், தவறாமல் சந்தியாவந்தனத்தை, காயத்ரீ ஜபத்தைச் செய்துகொண்டு வந்து ச்ரேயஸை அடைய வேண்டியது; சிருங்கேரி ஜகத்குரு மஹா சமஸ்தானத்திலே, உங்களுக்கு இந்த சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம் சந்தர்ப்பத்திலே பூணுலானது உங்களுடைய மஹா பாக்யம். சங்கரர் என்றால் நம் எல்லோருக்கும் பரம ஆராத்யமான லோககுரு. அவர் அவதாரம் செய்த இந்த நாள் பரம பவித்ரமான நாள். நான் சொன்ன விஷயங்கள் எல்லாவற்றையும் எப்பொழுதும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்து, அதன்படியே நடந்து ச்ரேயஸை அடையவேண்டியது என்று சொல்லி, திரும்பவும் இந்தக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்பை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, அதன்படி அந்தப் பொறுப்பை நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லி, இந்த வார்த்தையை இங்கே முடிக்கிறேன்.



- from the anugraha bhashanam rendered on the occasion of the Kumbhabhisheka of Gayatri Devasthana at Koppa by His Holiness Sri Bharati Tirtha Mahaswamiji of Sringeri.

No comments:

Post a Comment