Contact Us

Name

Email *

Message *

Sunday 11 January 2015

திருவடிச் சிவப்பு


சென்றவரைத் தாமாக்கும் தில்லைச் சிற்றம்பலத்து
மன்றவரைத் தாமாக்க வல்லவர் யார்? என்றுமிவர்
ஆடப் பதஞ்சலியாராக்கினார் என் பிறவி
சாடப் பதஞ்சலியார் தாம்

-  ஸ்ரீ குமரகுருபரர்.


தூக்கிய திருவடியைத் தரிசித்த புலவருக்கு அதன் சிவந்த நிறத்திற்கான காரணம் என்ன என்ற ஆராய்ச்சி பிறக்கிறது. ஐயன் ஒரே அடியை ஊன்றி ஆடுவதால் அது சிவந்து இருப்பது சரியே. ஆனால் தூக்கிய திருவடியும் ஏன் சிவந்து காணப்படுகிறது? ஒருவேளை அம்மை சிவகாமவல்லி, ஐயனின் பாதங்களைப் பிடித்து விடுவதால் அம்மையின் செந்தளிர்க் கரங்களின் செம்மை நிறத்தால், இரு பாதங்களுமே சிவந்து காணப் படுகின்றனவோ? இது தான் காரணமாயிருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

நடராஜப் பெருமான் இப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆடிக் கொண்டிருக்கிறாரே! இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா? அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா? என்று கவலையும் ஆச்சரியமும் ஏற்படுகிறது புலவருக்கு. ஆனால் அவர் யாருக்காக ஆடுகிறார்? பதஞ்சலி முனிவருக்காக அல்லவா ஆடுகிறார்! அவரோ பதம் சலியாத முனிவர்! அவர் பெருமானையும் பதம் சலியாதவராக ஆக்கி விட்டாரோ?

ஐயன் தம்மிடம் வருபவரைத்தாமாக்கும் தன்மை கொண்டவர் என்பது பிரசித்தம். ஆனால் இங்கோ பதஞ்சலி முனிவர் ஐயனையே தம்மைப் போல் பதம்+சலியாதவர் என்றே ஆக்கி விட்டார் என்று தோன்றுகிறது!

No comments:

Post a Comment