Contact Us

Name

Email *

Message *

Wednesday 23 September 2015

சிவ நாம மஹிமை

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

யத்-த்வயக்ஷரம் நாம கிரேரிதம் த்ருணாம்
ஸக்ருத் ப்ரஸங்காத் அகம் ஆக ஹந்தி...

'த்வயக்ஷரம் நாம' - 'இரண்டே இரண்டு அக்ஷரம் உள்ள சிவ நாமா'. பஞ்சாக்ஷரமாக அதற்கு முன்னாடிப் ப்ரணவம், பின்னாடி 'நம': சொல்லணுமென்றுகூட இல்லை. அவ்வளவு ச்ரமம் வேண்டாம். இரண்டெழுத்தைச் சொன்னாலே போதும்.

'சிவசிவ எனகிலர் தீவினையாளர்' என்றுதான் திருமந்திர'த்தில் கூட இருக்கிறது; பஞ்சாக்ஷரமாகச் சொல்லவில்லை. "த்வயக்ஷரம் நாம கிரா" என்றால் 'இரண்டே அக்ஷரமுள்ள நாமமான வார்த்தை'. இந்த வார்த்தையானது மனிதர்களால் சொல்லப்பட்டால் ('ந்ருணாம் ஈரிதம்' - மநுஷ்யர்களால் சொல்லப்பட்டால்).

எப்படிச் சொல்ல வேண்டும்?

ஸ்நானம் பண்ணி, மடி பண்ணிக் கொண்டு, மூச்சை கீச்சை அடக்கி ரொம்பவும் நியமமாகச் சொல்ல வேண்டுமா?

ஊஹூம், அதெல்லாம் வேண்டியதில்லை. 'ஸக்ருத் ப்ரஸங்காத் '- ஏதோ ஒரு தடவை பேச்சுக்கு நடுப்பற, எத்தனையோ அரட்டை அடிக்கிறபோது ...

சிவனை நினைத்து, மனஸைச் செலுத்தி புத்தி பூர்வமாக, 'அவன் பேர்' என்று சொல்ல வேண்டியதுகூட இல்லை. அகஸ்மாத்தாக ஏதோ பேச்சுக்கு நடுப்பற அந்த இரண்டெழுத்து வந்துவிட்டால்கூடப் போதும்!

'சிவப்பு அரிசி வடாம்' என்கிற மாதிரி எதையோ சொல்லிக் கொண்டு போகும்போது இந்த இரண்டெழுத்து வந்து விட்டால் கூடப் போதும்...

இவ்வாறு அது அகஸ்மாத்தாக ஒருதரம் சொல்லப்பட்டால்கூட என்ன பண்ணிவிடுகிறது?

அகம் ஆசு ஹந்தி

'அகம்' - பாபத்தை; 'ஆசு '- உடனே, தத்க்ஷணமே; 'ஹந்தி '- அழித்துவிடுகிறது.

பேச்சுக்கிடையே ஏதோ ஒரு தரம் 'சிவ' என்ற இரண்டு அக்ஷரத்தை அகஸ்மாத்தாகச் சொல்லிவிட்டாலும் அதுவே ஸமஸ்த பாபத்தையும் போக்கிவிடும்.

ஸத்தியங்களுக்கெல்லாம் மேலான ஸத்யமாக, ப்ராண த்யாக ஸமயத்திலே ஸாக்ஷாத் பரதேவதை சொன்னதாக சுகாசார்யாள் வாயினால் வந்திருக்கிற வாக்யம் இது.

'சிவசிவ என்று சொல்லாதவன் தீவினையாளன்' என்றால் துஷ்கர்மா பண்ணினவன், அதாவது பாபி என்று அர்த்தம். அப்படியானால், சிவ நாமா சொல்லிவிட்டால் பாபம் போய்விடும் என்றுதானே அர்த்தம்?

தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவோ பாபம் பண்ணி விட்டோம். அதுதான் மேலே போக முடியாதபடி பெரிசாகத் தடை செய்கிறது. சிவநாமா சொல்லி விட்டால் அந்தத் தடை போய்விடும் அப்புறம் மோக்ஷ பர்யந்தம் எல்லாம் ஸித்தியாகிவிடும்.

மற்ற மதஸ்தர்களில் சிலர், "உங்கள் மதத்தில் பாபத்தைப் பரிஹரிக்க வழி இல்லை. எங்களிடம் இருக்கிறது. கொஞ்சம் தீர்த்தம் தெளிக்கிறோம். பாபமெல்லாம் போய்விடும். ஆகையால் எங்களிடம் வாருங்கள்" என்கிறார்கள்.

நம் மதத்தில் பாப பரிஹாரத்துக்கு வழி சொல்லாதது மாதிரி இவர்கள் கூப்பிடுகிறார்கள். நமக்கும் ஒன்றும் மத விஷயம் தெரியாததால் இங்கேயிருந்து அங்கே போகிறவர்களும் இருக்கிறார்கள். வாஸ்தவத்திலோ, நம்முடைய மதத்தில் இத்தனை கர்மாநுஷ்டானம் விதித்திருப்பது பாபம் போகத்தான். "மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா " என்றுதான் எந்தக் கர்மாவுக்கும் முதலில் ஸங்கல்பம் பண்ணுகிறோம். 'துரிதம்' என்றால் பாபம்தான். பக்தி மார்க்கம் பாபத்தைப் போக்கத்தான். பக்தி முதிர்ந்து ப்ரபத்தி (சரணாகதி) ஆகும். பகவான் கீதையைப் பூர்த்தி பண்ணும்போது, "சரணாகதி பண்ணு. உன்னை ஸகல பாபங்களிலிருந்து விடுவித்து விடுகிறேன். ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி" என்று ஸத்யம் பண்ணித் தந்திருக்கிறார். அவரை நம்பாமல் நாம் இன்னொருத்தரிடம் போக வேண்டியதில்லை.

தர்மம், ஞானம் எதுவானாலும் பாபத்தைப் போக்குவதே. தர்மேண பாபம் அபநுததி என்று மஹா நாராயண உபநிஷத்தே சொல்கிறது (79.7) . அந்த உபநிஷத்திலுள்ள ஸுக்தங்களில் அநேகம் பாப நிவிருத்தியைத்தான் திரும்பத் திரும்ப ப்ரார்த்திக்கின்றன. "பாபிகளில் மஹா பாபியானாலும் ஞான ஓடத்தினால் அந்தப் பாபத்தைக் கடந்து விடுவாய்" என்று கீதையில் (4.36) பகவான் சொல்கிறார்.

கர்மாநுஷ்டானம், தர்மாநுஷ்டானம் ப்ரபத்தி, ஞான ஸாதனை எல்லாவற்றையும்விடப் பரம ஸுலபமாக, நாம் தெரிந்தும் தெரியாமலும் ஜன்மாந்தரங்களாகப் பண்ணியுள்ள பாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கே பாகவதம் வழி சொல்லிவிட்டது. சிவ நாமோச்சாரணம்தான் அது.

அதனால் இனிமேல் "உங்கள் பாபத்தைக் கழுவி விடுகிறோம்" என்று நம்மைக் கூப்பிடுபவர்களிடம் "எங்களிடம் பாப பரிஹாரத்துக்கு இருக்கிறது போன்ற ஸுலபமான உபாயம் யாரிடமுமே இல்லை. அதனால் முதலில் நீங்கள் எங்களைக் கூப்பிடும் பாபத்தைப் பரிஹாரம் பண்ணிக்கொண்டுவிட்டு அப்புறம் வாருங்கள்" என்று சொல்லுவோம்!



நன்றி: காமகோடி 

No comments:

Post a Comment