Contact Us

Name

Email *

Message *

Wednesday 28 October 2015

கங்கையிற் புனிதமான காவிரி - துலா ஸ்நானம்

1. தில்லை பரமானந்தக் கூபம் (காசிக் கிணறு)
2. மாயூரம் துலாக் கட்டம் (லாக்கடம்)
3. திருவிசநல்லூர்  கங்கைக் கிணறு
4. கும்பகோணம் மஹாமகக் குளம்

ஐப்பசி (துலா) மாதம் முழுவதும் சூரியோதயத்தில் செய்யும் புனித ஸ்நானம் துலா ஸ்நானமாகும். தஞ்சை மாவட்டத்தில் அதனை துலா காவிரி ஸ்நானம் என்று அழைப்பார்கள்.

தலைக்காவிரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவிரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. துலாக் காவிரி ஸ்நானம் செய்பவர்கள், காவிரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம் வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும்.

கங்கை, ஐப்பசி மாதம் காவிரியில் கலப்பதற்காக வடக்கிலிருந்து கிளம்பி சிதம்பரத்திற்கு மஹாநவமியன்று நடராஜர் அபிஷேகத்திற்கான பரமானந்த கூபம் என்று அழைக்கப்படுகிற காசிக்கிணற்றிற்கு வருகிறாள் என்பது ஐதீகம். 

இங்கிருந்து புறப்பட்டு கடை முகத்திற்கு மயிலாடுதுறை சென்று அங்கிருந்து கார்த்திகை அமாவாசை அன்று திருவிசலூர் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் அவர்களின் வீட்டில் இருக்கும் கிணற்றிற்கு செல்வதாக ஐதீகம். அங்கிருந்து மாசி மாதம் கும்பகோணம் மஹாமகக்குளம் சென்று நம் பாவங்களைப் போக்குவதாக ஐதீகம். 

குப்த கங்கை - ஸ்ரீ வாஞ்சியம் 
குப்த கங்கை 

ஸ்ரீ வாஞ்சிநாதர் அருளால் கங்கை தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற 999 கலைகளுடன் ஸ்ரீ வாஞ்சியம் கோயில் குப்த தீர்த்தத்தில் ஜக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள். இத்தலத்து தீர்த்தமும் குப்த கங்கை எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும் தேவியும் பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியருள்கின்றனர்.

சுவேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜுனம்|
சாயாவனம்ச ஸ்ரீவாஞ்சியம் காசீ ‌க்ஷேத்ர ஸமான ஷட்||

என்று ஒரு ஸ்லோகம் உள்ளது. இதன்படி, 

திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்) 
திருவையாறு, 
மயிலாடுதுறை, 
திருவிடைமருதூர்,
பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம்,
ஸ்ரீ வாஞ்சியம்.

ஆகிய ஆறு தலங்கள் காசிக்குச் சமமான க்ஷேத்திரங்களாகக் கூறப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள விருத்தாசலம், ஸ்ரீ வாஞ்சியம் ஆகிய இரண்டு தலங்களும் மகிமையில் காசிக்கு வீசம் அதிகம் என்று கூறுவர். எதனால் அத்தலங்கள் காசியை விடச் சிறந்தவை? இத்தலங்களில் இறக்கும் உயிர்களை, தேவி தனது மடியில் கிடத்திக் கொண்டு, “பாவம்! குழந்தை பிறப்பு, இறப்பு, மூப்பால் மிகவும் வாடிவிட்டது! நாம் சற்றே விச்ராந்தி அளிக்கலாம்!” என்ற கருணை உள்ளத்தோடு, தனது முன்றானையால் காற்றுவர வீசி ஆறுதல் அளிக்கிறாள்! அதே நேரத்தில் ஈசன் தாரக உபதேசம் செய்து உயிர்களை அழியா முக்தி இன்பத்திற்கு அனுப்புகிறான். விருத்தாசலத்திலும், ஸ்ரீ வாஞ்சியத்திலும் அம்பிகை தனது முன்றானையால் வீசுவது அதிகம்! அதனையே, ‘வீசம்’ என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment