Contact Us

Name

Email *

Message *

Thursday 3 November 2016

அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி - வாழ்க்கைக் குறிப்பு.. மூன்றாம் பகுதி - மறு பிறவி


சில வருடங்களுக்கு முன் வேறு ஒரு இடத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் பற்றி தெரிந்துகொள்வது இங்கு அவசியமாகிறது..

தமிழகத்தின் பின்னவாசல் என்ற ஊரில் மஹான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளை பரம குருவாகக்கொண்ட தெலுகு பிராம்மண வகுப்பைச் சேர்ந்த  யோகி ராமகிருஷ்ணா வாழ்ந்து வந்தார். அவர் பன்னிரண்டு வருடங்கள் ஆவுடையார் கோயிலில் தங்கி நவாக்ஷரி மந்திரத்தால் தேவி உபாசனை செய்தவர். மற்றும் கடுமையான தவங்கள் செய்து சித்துக்கள் கைவரப்பெற்றவர். ஒரு கால கட்டத்தில் திருமணமும் செய்துகொண்டார். ஆனால் மனைவியுடன் வாழவில்லை. சேர்ந்து வாழாவிட்டாலும் கணவருடன் ஒரு அடியாராக இருந்து பணிவிடை செய்யும் பாக்கியத்தை கோரினார். ஆனால் அவர் தன்னிடம் எப்போது நெருங்கினாலும் வெறுத்து விரட்டினார். பல காலம் இந்நிலை நீடித்து விரக்தியில் ஒரு நாள் அவர் கணவருக்கு சாபமிட்டார்.. "நீங்கள் அடுத்த பிறவியில் பெண்ணாக பிறந்து நான் பட்ட இன்னல்களுக்கு இணையான துன்பத்தை அனுபவிப்பீர்கள்".

சமஸ்க்ருதத்தில் தேர்ச்சி பெற்று பல அடியார்களையும் கொண்ட ராமகிருஷ்ணா, பாரதமெங்கும் பயணம் செய்தார். அவரே பலருக்கு குருவாக இருந்தபோதிலும் சந்நியாசம் பெற விழைந்தார். 1942ல் ரிஷிகேஷிலுள்ள  ஸ்வாமி சிவானந்தாவை சந்தித்து சந்நியாசம் வேண்ட, அவர் மறுத்துவிட்டார். திரும்பவும் பின்னவாசலுக்கே வந்து தனக்குத்தானே சந்நியாசம் கொண்டு தவம் செய்துவந்தார்.  

1943ல் பரமகுரு அவர்முன் தோன்றி  "உன் மனைவியின் சாபத்தால்  நீ இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்" எனக் கூறினார். யோகி ராமகிருஷ்ணா இதை தவிர்க்கும் உபாயம் கேட்கவே "உயிருள்ள மற்றொரு மனித உடலில் சூக்ஷ்ம வடிவில் நுழைந்து அந்த ஜீவன் வாழும் காலம்வரை இந்த சாபத்தை அனுபவிக்கவேண்டும்" என பரமகுரு கூறினார். ஒப்புக்கொண்டவர், தனது அடியாரிடம் தனது சமாதியை முழுதும் மூடவேண்டாம் எனக்கூறி அந்த வருடமே மஹாசமாதி அடைந்தார்.

இப்போது மரகதம்மாவின் வாழ்க்கையை தொடர்ந்து காண்போம்...

மார்ச் 1948ல் மரகதம்மா தன் உறவினர் ஒருவருடன் ஸ்ரீசைலம் சென்றிருந்தார். திரும்பி வருகையில் பல வாரங்களுக்கு நோய்வாய்பட்டார். மே மாதம் மாடியிலிருந்து கையில் பேரப்பிள்ளையுடன் இறங்கும்போது சறுக்கி விழுந்து மயக்கமடைந்தார். வைத்தியம் செய்த மருத்துவர் அவருக்கு மாரடைப்பு வந்துள்ளதாக தெரிவித்தார். மரகதம்மாவின் மகன்கள் இருவர் மருத்துவர்கள் ஆதலால் உதவியாக கூடவே இருந்து கவனித்தனர். அவர் நாடித் துடிப்பு பலஹீனமாகி உடல் ஆரோக்கியம் மோசமடைந்ததால் உறவினர்கள் அவர் உயிருக்கு ஆபத்தோ என அஞ்சினர்.

ஒரு நாள் மாலை மரகதம்மாவின் நாடித்துடிப்பும் இதயத்துடிப்பும் பூரணமாக ஒடுங்கியது. இது சமயம் மஹான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் யோகி ராமகிருஷ்ணாவிடம் இது குறித்து தெரிவித்து "ஒரு தூய சந்நியாசியின் உடலில் சூக்ஷ்ம வடிவில் புக இதுவே தக்க தருணம்.. கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாக முருகனின் கோயிலாக இருந்து வந்துள்ளது.. இது போன்ற ஒரு உடல் உனக்கு வேறு எப்போதும் கிட்டாது" எனக் கூறினார். அவ்வாறே யோகி ராமகிருஷ்ணாவும் மரகதம்மாவின் உடலில் புகுந்தார்.

உடனே மரகதம்மா இயல்பு நிலைக்கு திரும்பலானார். கண் விழித்துப் பார்க்கையில் எல்லோரும் பழகாத வேற்று மனிதராகவே தெரிந்தனர். மீண்டும் கண்ணை மூடியதும் அவருக்கு இவ்வாறு தோன்றியது.. "யாரை இவர்கள் தாய் என அழைக்கின்றனர்?.. இந்த உடலையா?.. அப்படியெனில் உள்ளே இருப்பது யார்?.. நான்தான் அவர்களின் தாயா?.. அல்லது எப்போதும் உள்ள அதே ஆன்மாவா?"

அவர் உள்ளே ஒரு குரல் கேட்டது.. 

"காலம் உன்னை வெளிப்படுத்தும், நீ கேட்டதெல்லாம் உனக்குக் கிடைக்கும்.. நீ என்ன விரும்பினாயோ அதை அடைந்தாய்.. தாயின் கருவில் பிறந்து உழலும் மறுபிறவியை நீ வேண்டவில்லை.. தொடர்ந்து வழிபட்டு இறைவன் இரகசியமாய் குடிகொண்ட கோயிலாக இவ்வுடல் கிடைத்துள்ளது.. இத்தருணத்தை சரியாக உபயோகப்படுத்திக்கொள்..   பல மஹான்களின் தரிசனம் உனக்குக் கிட்டும்.. பல கோயில்கள் மற்றும்  க்ஷேத்திரங்களுக்கு விஜயம் செய்வாய்.. எதிர்வரும் கடமைகளை ஏற்றுக்கொண்டு செய்து இறைவனிடம் சரணடைந்துவிடு."

இது கேட்டதும் மரகதம்மா "ஓ இறைவா" எனக்கதறினார். உடல் தூக்கிப்போட்டது. உடனிருந்த அனைவரும் அவருக்கு மறுபடியும் மாரடைப்பு என்று நினைத்து படுக்கையில் இருத்தினர். தனது உடல் மற்றொரு ஜீவனின் இருப்பிடமாகவும் ஆனது என தெரிந்துகொண்டார். இதில் சிறிது காலம் யோகி ராமகிருஷ்ணாவின் ஜீவனே பிரதானமாக விளங்கியது. 

பத்தொன்பது வருடங்களுப்பின் 1949ல் அவர் மாமியார் காவேரியமாளின் பெட்டி திறக்கப்பட்டது. மரகதம்மா எழுதிய பாடல் புத்தகங்களைத் தவிர பெட்டியில் இருந்த பணம், தஸ்தாவேஜுகள் அனைத்தும் கரையான் அரித்துவிட்டது. அது அப்பாடல்கள் பதிக்கப்படவே என அறிந்து திருப்பூர் மணி எனும் முருக பக்தரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதனை தான் பணிபுரியும் சஞ்சிகையில் தொகுப்புகளாக பதிவேற்றினார். இதுவே மரகதம்மா இயற்றிய பாடல்களின் முதல் பதிப்பாகும். 

மறுதினம் முருகன் காட்சி கொடுத்து அவர் முகவாயை பிடித்து "என்னை தெரியவில்லை?.. உன் பாடல்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டாயே.. அது உனக்கு தேவையில்லையா? ஸ்வர்ண மாலை, பூ மாலைகளைவிட உன் கண்ணீரில் தோய்ந்த பாமாலைதானே எனக்குப் பிரியம்?.. இன்று முதல் எப்போதும்போல என்மீது பாடல்களைப் பாடு" எனக் கேட்டார்.

"ஓ இறைவா.. நான் அனைத்தையும் மறந்துவிட்டேன். என்னுள் இருந்த ஒளி வெளியேறிவிட்டது. பாடும் திறமை நீ கொடுத்தது.. நான் என் மாமியாருக்கு உன்னைப் பாட மாட்டேன் என உறுதி கொடுத்துள்ளேன். உள்ளே இருப்பது யாரென்று அறிந்தும் இப்படி கேட்கலாமா?" என்றார்.

அதற்கு முருகன் "உறுதி கொடுத்தது பழைய ஜீவன்.. உள்ளே இருப்பது வேறு ஜீவன் எனத் தெரியாதா?.. உனக்கு பாடும் திறனைக்கொடுத்து பாட வைப்பதும் நான்தானே?.. உன்னை அறியும் திறனைக்கொடுத்ததும் நானே.. இருந்தும் மாயையிலிருந்து வெளிவர மறுக்கிறாயே?

இது உனக்குக் கிடைத்த முதல் காட்சி.. இந்த நாடகத்தில் மேலும் பல காட்சிகள் - இன்பமும் துன்பமுமாக உனக்குக் கிடைக்கும்.. இனி நடப்பவற்றை வெறும் சாட்சியாக மட்டும் காண்பாயாக.. பாடல் புனையும் கடமையை   மட்டுமே பேனாவாகிய உனக்கு நான் கொடுத்திருக்கிறேன்"   எனக் கூறி பிரகாசமான ஒளியாக மறைந்துவிட்டார். இதனால் ஊக்கமடைந்த மரகதம்மா இந்த அனுபவத்தை பாடலாகப் புனைந்தார். தொடர்ந்து மற்ற பாடல்களும் பிறந்தன. அன்று மாலை அவர் பாடல்களை பதிப்பதற்காக எடுத்துச்சென்ற பாலாம்பிகா, பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பதிப்பிக்கப்படும் எனவும் கூறி அவரிடம் திருத்தணி முருகன் பிரசாதமும், 31.12.1948 அன்று நடந்து முடிந்த கோயில் திருவிழாவின் நிகழ்ச்சி குறிப்பையும் கொடுத்துசென்றார். அதில் முருகன் மற்றும் அருணகிரிநாதரின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. அதில் கண்ட முருகனின் திருவுருவம் அவரை வெகுவாக கவர்ந்தது.


அவருள்ளிருந்த யோகி ராமகிருஷ்ணாவுக்கு "எல்லாம் நன்றாகவே உள்ளது.. மஹான்களின் தரிசனம் கிட்டும்" என்ற குரலும் கேட்டது. 1950ம் வருடம் மரகதம்மா திருவண்ணாமலைக்கு க்ஷேத்ராடனம் சென்றபோது அது நிறைவேறியது.



(ஸ்ரீ ஆண்டவன் பிச்சி அவர்களின் முக்கிய வாழ்க்கைக் குறிப்புகள் கீழ்கண்ட வலை தளத்திலிருந்து (ஆங்கில மூலம்) இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.. இதன் தொடர்ச்சியாக மேலும் சில தகவல்கள் அடுத்த பதிவில்).

This post has come from a book entitled The Gift of God or Andavan Pichhai by Smt and Dr Krishna Rao. It was published by the Divine Life Society, Sivanandanagar, Uttar Pradesh, in 1983.

Source (English): http://sri-ramana-maharshi.blogspot.in/2008/06/andavan-pichhai_09.html

No comments:

Post a Comment