Contact Us

Name

Email *

Message *

Friday 4 November 2016

அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி - வாழ்க்கைக் குறிப்பு.. நான்காம் பகுதி - ஸ்ரீ ரமண தரிசனம்

திருவண்ணாமலை விஜயம்


1950ம் வருடம் மார்ச் 27ம் தேதி மரகதம்மாவின் நாத்தனாரும் இன்னும் சில பெண்களும் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரையும் ரமண மஹரிஷியையும் தரிசிக்க திட்டமிட்டு மரகதம்மாவையும் உடன் வர அழைத்தனர். திருவண்ணாமலையை அடைந்தபோது இரவு பத்து மணியாகிவிட்டது. கோயிலுக்குச் சென்றபோது அவர்களை வெளிப் பிரஹாரத்தில் சந்தித்த சிவாச்சாரியர்கள், அர்த்தஜாம பூஜை முடிந்து நடை சாத்தியாகிவிட்டதை தெரிவித்தனர். மரகதம்மா குழுவினரோ கோயில் விளக்குகள் அணைக்கப்படும் முன் தாங்கள் சாளரத்தின் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டினர். குழுவில் பாதி பேர் உள்ளே சென்று அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு உண்ணாமுலையம்மன் சன்னதிக்குச் சென்றனர்.

அங்கு ஒரு அழகிய சிறுவன் படியில் உட்கார்ந்து இனிமையான குரலில் துதிப் பாடல்கள் பாடுவதைக் கண்டனர். அவன் இவர்களுக்காக அர்ச்சனை செய்வதாகக் கூறினான். இவர்களோ "நாங்கள் பூக்கள்,  பழங்கள், தேங்காய், ஏதும் எடுத்துவரவில்லையே" எனக்கூற, அவனோ அவையெல்லாம் சன்னதியில் உள்ளதாகவும் அதையே அவர்கள் பகிர்ந்துகொள்ளலாம் எனவும் கூறினான். அவ்வாறே அர்ச்சனை செய்து அவர்களுக்கு பிரசாதமும் கொடுத்தான். பணம் ஏதும் கொண்டுவராததினால் மரகதம்மா தன்னிடம் இருந்த ஒரே ஒரு ஓட்டைக் காலணா செப்புக் காசை தட்சிணையாக கொடுத்தார். அதை சந்தோஷாமாக பெற்று தனது கைவிரலில் மோதிரம் போல அணிந்துகொண்டு மீதி தட்சிணையை மறுநாள் பெற்றுக்கொள்வதாகக் கூறினான். அவன் பெயரைக் கேட்டதற்கு 'தண்டபாணி' என்று கூறினான். அவர்கள்  கோயிலைவிட்டு வெளியே வரும்போது விளக்குகள் அணைந்துவிட்டன. மரகதம்மாவைத் தவிர அனைவரும் வெளியேறிவிட்டனர். அந்தச் சிறுவன் மரகதம்மாவின் கையைப் பற்றி கோயிலுக்கு உள்ளே முருகன் சன்னதிக்கு அழைத்துசென்றான். அதுவே அருணகிரிநாதருக்கு முருகன் கம்பத்திலிருந்து வெளிப்பட்டு காட்சி கொடுத்த இடம். தான் அங்கேயே வசிப்பதாகக் கூறி மேலும் பல கதைகளும் சொன்னான்.



ஸ்ரீ ரமண மஹரிஷி தரிசனம் 


மறுநாள் காலை குழுவினர் அவனை கோயிலில் எங்கு தேடினும் காணவில்லை. முதல் நாள் அனுபவங்களை சிவாச்சாரியார்களிடம் விவரித்தபோது, கோயில் மூடியபின் நீங்கள் எப்படி இறைவனை தரிசித்திருக்க முடியும் எனக் கேட்டு சிரித்தனர். அன்று தரிசனம் ஆனபின் அனைவரும் மறுநாள் காலை ரமண மஹரிஷியைக் காணச் சென்றனர். அன்று சோமவாரப் பிரதோஷம், ஏராளமானோர் தரிசனத்திற்காக காத்திருந்தனர். முதன்முறை ரமணாஸ்ரமத்தின் உள்ளே நுழைந்ததும் மரகதம்மாவுக்கு மிக ஆனந்தமாகவும் முன்னமே பரிச்சயமான இடமாகவும் தோன்றியது. தன்னையும் தன்னுடன் வந்தவர்களையும் மறந்தார். அவர் மனமும் மற்ற புலன்களும் ஸ்தம்பித்து நின்றன. இருந்தும் தூரத்தில் பகவான் கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்திருந்ததை மட்டும் கண்டார். அவர் முகம் பூரண ஒளியோடும் ஆகர்ஷணத்தொடும் விளங்கியது. அப்போது பகவான் தான் அனுபவித்துக் கொண்டிருந்த உடல் வருத்தத்தின் சாயல் கூட அதில் காணவில்லை. மரகதம்மாவுக்கு தான் த்வைதம் கடந்து ஒரு கருணைக்கடலில் மிதப்பது போலத் தோன்றியது.

பகவானை நெருங்கியபோது மின்சாரத்தால் தாக்குண்டது போல உணர்ந்தார். உடல் நடுங்கியது. இதயத்துடிப்பு அதிகமானது. பகவான் முன் வணங்கி எழுந்து அவர் முகம் நோக்கி நின்றார். பகவானின் அருட்பார்வை அவர் மேல் விழுந்தது. கருணை பொங்கி எங்கும் அருள்வெள்ளம் பாய்ந்தது. அதிலிருந்து ஒரு ஒளிக்கற்றை மரகதம்மா மீது பாய்ந்தது. மரகதம்மாவுக்கு 'ஷடாக்ஷரி' மந்திரத்தை நயனதீக்ஷையாகவே உபதேசித்தார் பகவான். அது அவர் ஜீவனைத் துளைத்து மனத்திலிருந்த இருள் மற்றும் மாயையை ஒரேயடியாய் அழித்தது. மஹாவாக்கியத்தின் உண்மை பளிச்சிட்டு 'நான் யார்' என்ற ரகசியமும் விளங்கியது. ஜீவாத்மா - பரமாத்மா ஐக்கியஉணர்வு ஏற்பட்டு இந்த விஸ்வமே தன்னுள்ளே என்று உணர்ந்தார். 

தனது குழுவினர் பகவானுக்கு பலவகை பழங்களைச் சமர்ப்பித்ததைக்  கூட உணர முடியாத ஒரு அதிர்ச்சியில் அவர் இருந்தார். அவரோ கருப்பு திராட்சைகள் மட்டுமே சமர்ப்பித்தார். பகவான் அன்று மிகுந்த ஹாஸ்ய உணர்வோடு "உனக்கு தண்டபாணியின் தரிசனம் கிடைத்ததா?" என்று கேட்டார்.  இக்கேள்வி அவர்களுக்கு சொல்லனா அதிர்ச்சியைக் கொடுத்தது. இதன் மூலம் முதல் நாள் இரவு கோயிலில் தங்களுக்காக அர்ச்சனை செய்து உதவியது முருகக் கடவுளே என பகவான் உறுதிப்படுத்தினார். பின்பு மரகதம்மா சமர்ப்பித்த திராட்சைகளைக் காட்டி "இவை இந்த உடம்புக்கு பிடிக்கும்" எனக் கூறி ஒன்றை தான் உண்டு மற்றவற்றை பக்தர்களுக்கு விநியோகிக்கக் கூறினார்.

முன்னமே முருகன் ஷடாக்ஷரி மந்திரத்தை உபதேசித்திருந்தும் மீண்டும் பகவான் அதையே உபதேசித்தது விநோதமாய் தோன்றலாம். ஆனால் மரகதம்மாவின் வாழ்க்கையில் எப்போதெல்லாம் மஹான்களின் தொடர்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஷடாக்ஷரி மந்திரமே உபதேசமானது. மொத்தம் ஆறு முறை இவ்வாறு ஷடாக்ஷரி உபதேசமானது. பகவான் உபதேசம் மட்டுமே செய்யாமல் அதன் பலனையே கொடுத்துவிட்டார்.

குழுவினர் அன்றே திருவண்ணாமலையிலிருந்து கிளம்பினர். ஆனால் பகவானுக்கு உடல்நிலை மோசமானது எனக் கேட்டு  இரண்டு வாரத்திலேயே மரகதம்மா மீண்டும் ரமணாஸ்ரமம் சென்றார். இரண்டாம் முறையும் தரிசனம் கிட்டியது.

1950ம் வருடம் ஏப்ரல் 12ம் தேதி தனது குழுவினரோடு மீண்டும் பகவானை தரிசனம் செய்தார். இடது கையில் ரண சிகிச்சை ஆகி கட்டு போடப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு அவர் அருகில் நிற்க சிறிது நேரமே கொடுத்து வைத்தது. தான் முன்னமே வாங்கிய பகவானின் புகைப்படத்துடன் மரகதம்மா அருகே சென்றதும் அதை வாங்கி தன் வலது கையில் வைத்திருந்து புன்சிரிப்புடன் திரும்பக் கொடுத்து, பின் ஆசீர்வாதம் செய்தார். பேச முடியவில்லையே என வருத்தப்பட்டார். அடுத்த இரண்டாம் நாள் பகவான் மஹாசமாதியடைந்து அண்ணாமலையாருடன் கலந்துவிட்டார்.

அருள் நிலையில் இருந்த மரகதம்மா சென்னை திரும்பியதும் ஜூன் 19ம் தேதி இந்த அனுபவத்தை "ஜீவ-பிரம்ம-ஐக்கியம்" என தலைப்பிட்டு செங்கல்வராயப் பிள்ளையிடம் கொடுத்தார். அதைப் படிக்கக் கேட்ட  ரமண பக்தரான முருகனார் சிலிர்த்து, "இத்தனைக் காலமும் பகவானின் உடனிருந்த எனக்கு இந்த அனுபவம் கிட்டவில்லையே... அப்படியே கிட்டியிருந்தாலும் இதுபோல என்னால் விவரிக்க முடியாது" எனக் கூறினார். செங்கல்வராயப் பிள்ளையிடம் அதனை பதிப்பிக்கவும் வேண்டினார். அது ஸ்ரீ பாணி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.  துரதிஷ்டவசமாக அலமாரியில் வைக்கப்பட்ட அவற்றை கரையான் தின்றுவிட்டது. ஸ்ரீ பாணி உடனே மரகதம்மாடவிம் சென்று நடந்ததைக் கூறி மறுபடியும் எழுதிக்கொடுக்கச் சொன்னார். ஆனால் அவரோ ஜீவ-பிரம்ம-ஐக்கியம் ஒருமுறை ஆனபின் மறுமுறை எழுத அவசியமில்லை.. அதனால் தான் அவை அழிந்துவிட்டன எனக் கூறிவிட்டார்.

இயல்பு வாழ்கைக்கு திரும்பிய மரகதம்மாவுக்கு 1951ல் ஒரு நாள் "கூடிய விரைவில் உனக்கு இரண்டு பேரப்பிள்ளைகள் பிறப்பார்கள்.. அவர்களுக்கு 'ரமணா' மற்றும் 'தண்டபாணி' எனப் பெயரிடு" என்று  ரமண மஹரிஷியின் குரல் கேட்டது. அவ்வாறே ஜூன் மாதம் ரமணாவும் ஆகஸ்ட் மாதம் தண்டபாணியும் பிறந்தனர்.

ஸ்ரீ ரமண அனுபவம் தொடரும்...



(ஸ்ரீ ஆண்டவன் பிச்சி அவர்களின் முக்கிய வாழ்க்கைக் குறிப்புகள் கீழ்கண்ட வலை தளத்திலிருந்து (ஆங்கில மூலம்) இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.. இதன் தொடர்ச்சியாக மேலும் சில தகவல்கள் அடுத்த பதிவில்).

This post has come from a book entitled The Gift of God or Andavan Pichhai by Smt and Dr Krishna Rao. It was published by the Divine Life Society, Sivanandanagar, Uttar Pradesh, in 1983.

Source (English): http://sri-ramana-maharshi.blogspot.in/2008/06/andavan-pichhai_09.html

No comments:

Post a Comment