Contact Us

Name

Email *

Message *

Monday 13 March 2017

காரடையான் நோன்பு


மாசி மாதத்தின் சிறப்பு மஹா சிவராத்ரி என்றால் பங்குனி தொடக்கமே அன்னை அருளுடன் ஆரம்பிக்கச் செய்திருக்கின்றனர் பெரியவர்கள். ஆம்! காரடையான் நோன்பு என்பது அன்னை காமாக்ஷி தன் பதியாம் கைலாஸபதியுடன் சேர்வதற்காக இருந்த நோன்பு. மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் பெண்கள் தங்களது கணவரது நல்வாழ்விற்காக இருப்பது இந்த நோன்பு.

'மாசிச் சரடு பாசி படரும்' என்பதற்கேற்ப சுமங்கலிப் பெண்கள் மாசி முடிந்து பங்குனி ஆரம்பிக்கும் நேரத்தில் காமாக்ஷி அம்மனுக்கு பூஜை செய்து கார் அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு அடையும், வெண்ணையும் நிவேதனம் செய்து, நோன்புச் சரட்டினைக் கட்டிக்கொள்கின்றனர். சரடைக் கட்டிக்கொள்ளும் போது பிரார்த்தனையாக,

'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்'

என்று அழகுத்தமிழில் அம்மனிடம் பிரார்த்தனை செய்து முதலாக ஒரு சரட்டினை அம்மனுக்கு சார்த்திவிட்டு இன்னொன்றைக் கையில் எடுத்துக் கொண்டு,

தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம் 
பர்த்து ஆயுஷ்ய ஸித்யர்த்தம்  ஸுப்ரீதா பவ ஸர்வதா

பொருள்: ஹே ஸுபகே! பாக்யத்தைத்தரும் தேவியே! மஞ்சளுடன் கூடிய இந்த மங்கள நாண் கயிற்றை (சரட்டை) முறையாக விரதமிருந்து நான் என் கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும்.

என்னும் ஸ்லோகத்தைச் சொல்லி பெண்கள் கழுத்தில் கட்டிக் கொள்வர். இது கன்னிப் பெண்களுக்கும் நல்ல கணவன் வாய்க்கப் பிரார்த்தனை செய்து கட்டிக் கொள்வதுண்டு.


இவ்வாறாக கட்டிக் கொண்டபின் நிவேதனம் செய்த அடையில் ஒரு அடையினை கணவனுக்கும் கொடுத்து இன்னொன்றை தானும் உண்பார்கள். சிறிது மீதம் வைத்து பசுமாட்டுக்கும் உணவாக தருவது சில இல்லங்களில் வழக்கம்.

பதிவ்ரதா தெய்வம் என்று போற்றப்படும் சாவித்ரி இந்த நோன்பினை செய்து தனது கணவன் சத்யவானை எமனிடமிருந்து மீட்டாள் என்பது புராணம். இந்த நோன்பால் செய்யும் பெண்ணுக்கும், அவளது கணவனுக்கும் நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஒற்றுமை, குடும்பத்தில் அமைதி முதலிய நன்மைகள் எற்படும் என்பது ஆன்றோர் வாக்கு.




நன்றி: திரு. மெளலி (மதுரையம்பதி)

No comments:

Post a Comment